தொழிலாளியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
4 மாதங்களுக்கு முன்பு குளத்தில் மூழ்கி பலியான, தொழிலாளியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சேத்தியாத்தோப்பு,
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீரமுடையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை மகன் பாண்டியன் என்கிற அம்பேத் (வயது 40). திருமணமாகி மனைவியை பிரிந்த பாண்டியன், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி என்ற கிராமத்தில் உள்ள செங்கல்சூளையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 6.12.2020 அன்று பட்டாம்பியில் உள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றபோது, பாண்டியன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டதாக தெரிகிறது.
சாவில் சந்தேகம்
இதையடுத்து பாண்டியனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது மைத்துனர் ராஜா(45) என்பவர், பாண்டியனின் சாவில் சந்தேகம் உள்ளதாக பட்டாம்பி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து பாலக்காடு மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, பாண்டியனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
பிரேத பரிசோதனை
அதன் பேரில் புவனகிரி தாசில்தார் அன்பழகன் முன்னிலையில் பாண்டியன் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சுனில் சுப்பிரமணியன், ஜோசி மா ஜனார்த்தனன் ஆகியோர் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அதே இடத்திலேயே பாண்டியன் உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது வருவாய் ஆய்வாளர் சுபாஷ், கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ், முதல் நிலை வருவாய் ஆய்வாளர் சஞ்ஜய் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story