1 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


1 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 1 April 2021 7:49 PM GMT (Updated: 1 April 2021 7:49 PM GMT)

மதுரை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மதுரை, 
மதுரை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி 16-ந்தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். முதற் கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியா ளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயது முதல் 59 வயது வரை உள்ள இணை நோயாளிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 
இதற்கிடையே, சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அந்த பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள், துணை ராணுவப் படையினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இணை நோய்கள் அல்லாத 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
1 லட்சத்து 26 ஆயிரம்
இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்டம் முழுவதிலும் 207 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினிகிளினிக், அரசு ஆஸ்பத்திரிகள் என 153 இடங்களிலும், 54 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கி றார்கள். 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினால், அவர்கள் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
48 பேருக்கு கொரோனா
தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்துவரும் வேளையில், கொரோனா பாதிப்பும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி, மதுரையில் நேற்று புதிதாக 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 35 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 859 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் நேற்று 27 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 17 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். 
இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 75 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களை தவிர 318 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதற்கிடையே, மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

Next Story