கொரோனா பரிசோதனையில் மதுரை மருத்துவக்கல்லூரி முதலிடம்


கொரோனா பரிசோதனையில் மதுரை மருத்துவக்கல்லூரி முதலிடம்
x
தினத்தந்தி 2 April 2021 1:50 AM IST (Updated: 2 April 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரிசோதனையில் மதுரை மருத்துவக் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது.

மதுரை, 
கொரோனா பரிசோதனையில் மதுரை மருத்துவக் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது.
கொரோனா பரிசோதனை
கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிவதற்காக தமிழகத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். என்ற பரிசோதனையின் மூலம் நோயாளிகளிடம் இருந்து சளி மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இந்தநிலையில், மதுரை மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் துறையில் இயங்கி வரும் கொரோனா ஆய்வகத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டு தலின்படி ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. 
இந்த ஆய்வகத்தில் இதுவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு உள்ளது. மதுரை மருத்துவ கல்லூரி ஆய்வகத்தில் மதுரை மாவட்டுமல்லாது திண்டுக்கல், விருதுநகர், ராஜ பாளையம், ராமநாதபுரம், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி போன்ற மற்ற பகுதிகளில் உள்ள மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. 
ஆய்வகத்தில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்கள், ஆய்வக மேற்பார்வை யாளர்கள், ஆய்வக நுட்புணர்கள், சுகாதார ஆய்வா ளர்கள், கணினி இயக்குனர்கள், புள்ளியியலாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் ஆகியோரைப் பாராட்டும் விதமாக மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டீன் சங்குமணி, ஆய்வகத்தை நேரில் பார்வையிட்டு அனைவரையும் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
முதலிடம்
அப்போது அவர் கூறுகையில், இந்த ஆய்வகம் கடந்த வருடம் மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் இன்று வரை 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் வழிகாட்டுதலின்படி ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்கள், கல்லூரி மாணவர் சேர்க்கை, சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களின் மாதிரிகள் உடனுக்குடன் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மற்றுமொரு சிறப்பம்சமாக ஆய்வக பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமாக அவரவர் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படுகிறது. 
மேலும் பரிசோதனை முடிவுகளை இணையத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ள www.covid19mdumc.in என்ற இணையதள முகவரி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முடிவுகளுக்காக அலைக் கழிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழக மருத்துவ கல்லூரி கொரோனா ஆய்வகங்களில் மதுரை மருத்துவ கல்லூரி ஆய்வகம் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்து முதலிடம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story