ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி


ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 2 April 2021 2:25 AM IST (Updated: 2 April 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
வெயிலின் தாக்கம்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. நாளுக்குநாள் வெப்ப சலனம் அதிகமாக உள்ளது. இந்தநிலையில் தரைக்காற்று வட மேற்கு திசையில் இருந்து தமிழக பகுதியை நோக்கி வீசுவதால் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்றும், அதனால் அனல் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அந்த 21 மாவட்டங்களில் ஈரோடு மாவட்டமும் இடம் பெற்றுள்ளது.
மேலும், பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஈரோட்டை பொறுத்தவரை நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது.
109 டிகிரி
பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. நேற்று அதிகமாக 109.76 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு தோல் சுடுவதை உணர முடிந்தது. அந்த அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. குறிப்பாக வெயிலுக்கு பயந்து பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்தார்கள். இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் சாலையும் வெறிச்சோடி காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ள பொதுமக்கள் பலர் குளிர் பானங்களை பருகினார்கள். இதனால் நுங்கு, இளநீர், மோர், ஜூஸ் வகைகள், ஐஸ்கிரீம் போன்றவற்றின் விற்பனையும் சூடுபிடித்தது.
இந்தநிலையில நேற்று மாலையில் திடீரென காற்று வேகமாக வீசியது. ஈரோடு பஸ் நிலையம், மேட்டூர்ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, சத்திரோடு, பெருந்துறைரோடு உள்ளிட்ட பகுதிகளில் புழுதி அதிகமாக பறந்தது. பல இடங்களில் சுழல் காற்றும் வீசியதை பார்க்க முடிந்தது. சவிதா சிக்னல் பகுதியில் காற்றின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பேரிகார்டு கீழே விழுந்தது.

Next Story