புதிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் வாக்குறுதி


புதிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் வாக்குறுதி
x
தினத்தந்தி 2 April 2021 4:39 AM IST (Updated: 2 April 2021 4:39 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் தொகுதியில் விவசாய கழிவுகளை கொண்டு புதிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் வாக்குறுதி அளித்தார்.

வலங்கைமான்,

நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஆர். காமராஜ் தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் ஒன்றியத்தில் அனியமங்கலம், கோவிந்தகுடி, இனாம்கிளியூர், நல்லூர் அன்னுக்குடி, உத்தமதானபுரம், மூலாழ்வாஞ்சேரி, ஆவூர், ஊத்துக்காடு, மதகரம் மாளிகை திடல் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு. வழிநெடுக ஏராளமானோர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். மேலும்  பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் அமைச்சர் காமராஜ் வாக்கு சேரித்து பேசியதாவது:- 

நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை உறுப்பினராக இருந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி உள்ளேன். குறிப்பாக சாதாரண ஏழை, எளிய மக்களை கொண்ட நன்னிலம் தொகுதியில் மக்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் இரண்டு அரசு கல்லூரிகளும், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பஸ்கள் சென்று வர சாலைகளும், பயணத்தை குறைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளையும் அடுத்த 5 ஆண்டுகளில் முழுமையாக நிறைவேற்றி தருவேன். நன்னிலம் தொகுதியில் விவசாய கழிவு பொருட்களை கொண்டு புதிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், இப்பகுதியில் இத்திட்டங்கள் அனுமதிக்கப்பட முடியாத வகையில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். கொரோனா தொற்று காலத்தில் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றி அவர்களை பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டேன். நன்னிலம் தொகுதிக்குட்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியிலும் இந்த பணியை தொடர்ந்து செய்து வந்தேன். 

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட போது எனக்கும் கொரோனா தொற்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பது தெரிந்தாலும், நான் எதிர்பார்த்ததைவிட கூடுதலான பாதிப்புக்கு ஆளாகி மருத்துவ சிகிச்சையில் இருந்தேன். 

அப்போது நன்னிலம் தொகுதி மக்கள் சர்வமத பிரார்த்தனை மேற்கொண்டு என் உயிரை காப்பாற்றி இருக்கிறார்கள். அவர்களால் மறுபிறவி கிடைத்தது. எனக்கு மறு பிறவி கிடைக்க பிரார்த்தனை செய்த மக்கள் மீண்டும் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்வார்கள்.கடந்த 2 முறைகளை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். அவர் கூறினார்.

தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  பிரசாரத்தின் போது செங்கல் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், வாழை சாகுபடி பணியில் ஈடுபட்ட விவசாயிகள் ஆகியோரிடம் நேரில் சென்று அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரித்தார்.

Next Story