இளம்பிள்ளையில் மாரியம்மன்-காளியம்மன் கோவில் தேரோட்டம்
மாரியம்மன்-காளியம்மன் கோவில் தேரோட்டம்
இளம்பிள்ளை:
இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் பக்தர்கள் உருளு தண்டம் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, ரத ஊர்வலம், படைவெட்டி அம்மன் கோவிலில் இருந்து அம்மன் அழைப்பு, பக்தர்கள் பொங்கல் வைத்தல், குதிரை அருள்வாக்கு ஆகியவை நடைபெற்றது. அதன்பிறகு கோவில் வளாகத்தில் இருந்து தேரோட்டம் தொடங்கியது.
காடையாம்பட்டி பிரிவு ரோடு, சேலம் பிரிவு ரோடு, சவுண்டம்மன் கோவில் பகுதி வழியாக இளம்பிள்ளை நகரை சுற்றி மீண்டும் கோவிலை தேர் வந்தடைந்தது. தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டம் நடந்த போது வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய், பழம் மற்றும் பூஜை பொருட்களை வைத்து தேரில் உள்ள அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன் செய்து இருந்தார்.
Related Tags :
Next Story