வருகிற சட்டமன்ற தேர்தலோடு தி.மு.க.வுக்கு நிரந்தர ஓய்வு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்


வருகிற சட்டமன்ற தேர்தலோடு தி.மு.க.வுக்கு நிரந்தர ஓய்வு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்
x
தினத்தந்தி 2 April 2021 9:57 AM IST (Updated: 2 April 2021 9:57 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு பலிக்காது என்றும், வருகிற சட்டமன்ற தேர்தலோடு தி.மு.க.வுக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் முகமதியார்புரத்தில் திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் எந்த குறையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தொல்லையால் அல்லல்பட்ட மக்கள், மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினருக்கு 10 ஆண்டுகளாக ஓய்வு கொடுத்துள்ளனர். உங்களுக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க மக்கள் விரும்புகின்றனர். இதற்காகவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் தி.மு.க.வுக்கு நிரந்தரமாக ஓய்வு கிடைத்து விடும். 
மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துக்காக தி.மு.க.வை ஆதாயப்படுத்தி கொண்டிருக்கிறார். எனவே அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. எங்களால் மக்களுக்கு எந்த தொல்லையும் இல்லை. ஆனால் நீங்கள் ஓய்வு எடுத்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். வருகிற சட்டமன்ற தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் போது, நீங்கள் எதிர்கட்சி அந்தஸ்தில் வருவது கூட கடினம் தான். ஏனெனில், நீங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் செய்த அட்டூழியம் மக்கள் மனதில் அழியாத வடுவாகவே இருக்கிறது. அதனை மக்கள் மறக்க மாட்டார்கள். இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடைவது உறுதியாகி விட்டது. 

தேர்தல் பிரசாரம் என்றால் உங்களது ஆட்சிகாலத்தில் செய்த நல்ல விஷயங்களை சொல்லி மக்களிடம் ஓட்டு கேளுங்கள். இல்லையெனில் எங்களது குறைகளை சுட்டிகாட்டுங்கள். தி.மு.க.வினரால் அ.தி.மு.க. அரசை குறை சொல்ல முடியவில்லை. இதை விட்டுவிட்டு வாய்க்கு வந்தபடி பேசி சர்ச்சையில் சிக்கி கொள்ளாதீர்கள். ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி, உதயநிதி ஸ்டாலின் வரிசையில் தற்போது தயாநிதி மாறனும் தனது வாயால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். 

முன்னாள் மத்திய மந்திரியாக இருந்த ஒருவரே இப்படி நாக்கு கூச பேசினால், தி.மு.க.வினரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்அமைச்சர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக கங்கணம் கட்டி அவர்கள் பேசுவது போல தெரிகிறது. எனவே தி.மு.க. நிர்வாகிகளிடமே மு.க.ஸ்டாலின் உஷாராக இருப்பது நல்லது.
அரசியல் அநாகரீகமாக பேசுவதில் தி.மு.க.வினருக்கு நிகர் யாரும் இல்லை. தி.மு.க.வினரின் வாய்ப்பேச்சு எல்லாம், அ.தி.மு.க.வின் வாக்குகளாக மாறி கொண்டிருக்கின்றன. மக்கள் உங்களை விரட்டியடிக்கும் காலம் கனிந்துவிட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை பற்றி பேசிய ஆ.ராசாவை வன்மையாக கண்டிக்கிறேன். அவருடைய அருவருப்பான பேச்சை கண்டித்து, பிரசாரம் செய்ய ஆ.ராசாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் ஒரு மாயையை தி.மு.க. ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அதாவது, தங்களை சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன் என்று தி.மு.க.வினர் கூறுகிறார்கள். இதில் துளி அளவு கூட உண்மை கிடையாது. சிறுபான்மையின மக்கள் மீது அவர்களுக்கு எந்த அக்கரையும் இல்லை. அவர்களை ஓட்டு வங்கிகளாக மட்டுமே தி.மு.க. பயன்படுத்தி வருகிறது. 

உண்மையிலேயே சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாவலனாக திகழ்வது அ.தி.மு.க. அரசு தான். தற்போதைய தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையின மக்களுக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்து இருக்கிறோம். ஏற்கனவே பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறோம். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் எங்கேயாவது சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா?. ஆனால் தி.மு.க. ஆட்சியில் எத்தனை மதக்கலவரங்கள் நடந்துள்ளன. 

இந்து, முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்தி குளிர்காய்வது தி.மு.க.வின் வேலை. முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல உருவகப்படுத்தியதே கருணாநிதி தான். எனவே வருங்காலத்தில் தி.மு.க.வின் கபட நாடகம் சிறுபான்மையின மக்கள் மத்தியில் எடுபடாது. அ.தி.மு.க. அரசு, அவர்களுக்கு செய்த நன்மைகளை அறிந்து எங்களுக்கு ஓட்டு போட முடிவு செய்து விட்டனர்.

‘ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போறாரு‘ என்று கூறுகிறீர்களே. விடியலுக்கும், தி.மு.க.வுக்கு எந்த தொடர்பும் கிடையாது. தமிழகத்துக்கு இருண்டகால ஆட்சியை கொடுத்ததே தி.மு.க. தான். மின்வெட்டு மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியதே உங்களது சாதனை. நீங்களாவது விடியலை தருவதாவது. யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள். இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை வெளிச்சத்துக்குள் கொண்டுவர அ.தி.மு.க. அரசு என்ன பாடு பட்டது என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

10 ஆண்டுகள் நீங்கள் ஆட்சியில் இல்லை என்பதால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் செய்த துரோகம், மக்கள் விரோத நடவடிக்கைகள் அழியாத நினைவுகளாய் உள்ளன. மு.க.ஸ்டாலின் முதல்அமைச்சர் கனவில் உள்ளார். அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது. தி.மு.க.வுக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். வருகிற தேர்தலில், உங்களுக்கு வேட்டு வைக்க தயாராக உள்ளனர். தமிழகம் அமைதி, வளம், வளர்ச்சி பெறவும், மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி மலரவும் அ.தி.மு.க.வின் இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்களித்து என்னை பெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். கலந்துகொண்டவர்கள்

பிரச்சாரத்தில் தலைமை கழக பேச்சாளரும் திரைப்பட இயக்குனருமான லியாகத் அலிகான், அமைப்புச் செயலாளர் மருதராஜ், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதி முருகன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், சேசு, முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜே.எம்.எஸ்.இக்பால், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் இக்பால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story