தன்மானம், மாநில சுயாட்சி காக்க தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கோவையில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்


தன்மானம், மாநில சுயாட்சி காக்க தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கோவையில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்
x
தினத்தந்தி 2 April 2021 12:06 PM IST (Updated: 2 April 2021 12:06 PM IST)
t-max-icont-min-icon

தன்மானம், மாநில சுயாட்சி காக்க தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்

கோவை

தன்மானம், மாநில சுயாட்சி காக்க தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கோவையில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மு.க.ஸ்டாலின் பிரசாரம்

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு திரட்டுவதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று காலை மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து கோவை துடியலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளர்கள் நா.கார்த்திக் (சிங்காநல்லூர்), பையா என்கிற ஆர்.கிருஷ்ணன் (கவுண்டம்பாளையம்), வ.ம.சண்முகசுந்தரம் (கோவை வடக்கு), கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது

எதுவும் செய்யவில்லை

கொங்கு மண்டலம் என்றால் ஏதோ அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க.வினரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கொங்கு கோட்டையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே நாம் ஓட்டை போட்டு விட்டோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கோட்டையை வாஷ் அவுட் செய்ய போகிறோம். 


கொங்கு மண்டலத்தில் உள்ள எடப்பாடி தொகுதியில் பழனிசாமி, கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன், தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி, குமாரபாளையத்தில் தங்கமணி, உடுமலையில் ராதாகிருஷ்ணன், பவானியில் கருப்பண்ணன் என வலுவான அமைச்சர்கள் போட்டியிடுகிறார்கள். இவ்வளவு அமைச்சர்கள் இருப்பதால் கொங்கு மண்டலத்துக்கு எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. 

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயத்தை அழித்துள்ளனர். ஜி.எஸ்.டி. கொண்டு வந்து சிறு, குறு தொழில்களை நலிவடைய செய்தனர். 8 வழிச்சாலை அமைப்பதாக சொல்லி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினார்கள். நெசவாளர் மற்றும் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் பாதிப்படைந்துள்ளது. சிறுவாணி தண்ணீரை தனியாருக்கு எஸ்.பி.வேலுமணி தாரை வார்த்துள்ளார். 

போக போக பாருங்கள்

இங்கு இருக்கும் அமைச்சர் தனது பதவியை வைத்துக்கொண்டு, போலீஸ் அதிகாரத்தை வைத்துக் கொண்டு தி.மு.க.வினர் மீது பொய்யான வழக்கு போட்டார். இனி எங்கள் ஆட்டத்தை போக போக பார்க்க போகிறீர்கள். மே 2-ந் தேதி வரை காத்திருங்கள். நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.



நான் ஏதோ மிரட்டுகிறேன் என்று நினைக்க வேண்டாம். சட்டப்படி அவர்கள் செய்திருக்கும் ஊழல் பற்றி பட்டியலிட்டு நடவடிக்கை எடுத்து அத்தனை பேரும் சிறைக்கு செல்கிறார்களா? இல்லையா? என்று பாருங்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதிமன்றம் முன்பு நிறுத்தி சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவோம்.

மாநில சுயாட்சி 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதற்கு உடனடியாக பதில் அளித்தேன். இப்போது கோவையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட பேரணியின்போது, சிறுபான்மையினரின் கடைகளை அடித்து உடைத்துள்ளனர்.

அந்த கூட்டத்தில் உத்தரபிரதேச முதல்-மந்திரி பேசும்போது தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசியிருக்கிறார். ஆனால் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பற்ற மாநிலம் எது என்றால் உத்தரபிரதேசம் என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

 இவர்கள் வந்து தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை உள்ளது. எனவே சுயமரியாதை, தன்மானம், மாநில சுயாட்சி ஆகியவற்றை காக்க தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் ஒரு பெண் முதல்-அமைச்சர் மரணத்திலேயே மர்மம் உள்ளது. அதை கேட்டீர்களா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எனவே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலில் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தப்படும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அது போல கோவை மாவட்டத்துக்கும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவைக்கு திட்டங்கள்

நிலத்தடி நீரை பெறுவதற்காக பவானி ஆற்றிலிருந்து உபரி நீர் எடுக்கப் பட்டு சின்னவேடம்பட்டி ஏரிக்கு கொண்டு வரப்படும். சூயஸ் நிர்வாகத் தோடு கோவை மாநகராட்சி செய்துள்ள குடிநீர் வினியோக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். கோவை மாநகராட்சியே மக்களுக்கு குடிநீர் வழங்கும். கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காந்திபுரம், உக்கடம், பீளமேடு, அரசு மருத்துவமனை எதிரில், சிங்கா நல்லூர், ஹோப் கல்லூரி ஆகிய இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். 

கோவையில் டைடல் பார்க் 2-வது பிரிவு தொடங்கப்படும். கோவை அரசு மருத்துவ கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப் படும். பல் மருத்துவ கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி ஆகியவற்றுக்கு தனித் தனியாக கட்டிடங்கள் கட்டித் தரப்படும். கோவையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படும். 

பாதாள சாக்கடை திட்டம்

கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, நீலிகோணாம்பாளையம், பீளமேடு தண்ணீர்பந்தல் ரெயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்படும். 2009-ம் ஆண்டு கோவை மாநகராட்சியில் ரூ.377 கோடி நிதி ஒதுக்கி பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் அது கிடப்பில் போடப்பட்டதால் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அந்த பணிகள் துரிதப்படுத்தப்படும். 

5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம்

சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு பழுதான வீடுகள் மீண்டும் கட்டித்தரப்படும். சின்னதடாகத்தில் செயல்பட்டு வந்த 136 செங்கல் சூளைகள் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று கூறி அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்து தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் சுற்று சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய சட்டங்கள் இயற்றப்பட்டு செங்கல் சூளைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும். 

சின்னத்தடாகம் நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படும். சுகாதார பணியாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டு அவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். சிறு, குறு நடுத்தர தொழில்கள் மேம்பாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இவை உள்பட பல்வேறு திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. இதற்காக சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநாட்டில் 7 உறுதி மொழிகளை கூறினேன். அவற்றை நிறைவேற்ற வேண்டுமென்றால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்குகளை தாருங்கள். 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story