மதுரையில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா


மதுரையில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 April 2021 10:12 PM IST (Updated: 2 April 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் படிப்படியாக தொற்று உயர்ந்து வருகிறது.

மதுரை,

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி, ஜூன், ஜூலை மாதங்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த ஆண்டும் தமிழகத்தில் அதே நிலை தான் தொடர்கிறது.

மதுரையை பொறுத்தமட்டில் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு நேற்று திடீரென 100ஐ தாண்டியுள்ளது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 80 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை 21 ஆயிரத்து 964 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுபோல், நேற்று 33 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 21 ஆயித்து 108 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

மதுரையில் நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 390 ஆக உயர்ந்துள்ளது. படிப்படியாக பாதிப்பு எண்ணிக்கை உயர்வதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் வார்டுகள் அமைக்கும் பணி நடக்கிறது. 

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், வரும் காலங்களிலும் கொரோனா பாதிப்பு மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

தேர்தல் சமயமாக இருப்பதால், பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும்போது பெண்கள், குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுடன் பிரசாரத்திற்கு சென்று வந்தால் அது குழந்தையை பாதிக்காவிட்டாலும் வீட்டில் உள்ள பெரியவர்களை பாதிக்கும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story