கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் பணிபுரிய வேண்டும்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் பணிபுரிய வேண்டும் என நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் அறிவுரை கூறியுள்ளார்.
கடலூர்,
கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மாணவர்களாகிய நீங்கள், தேர்தல் பணியில் பங்கேற்பது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும்.
கொரோனா தொற்று காலத்தில் அரசு நடைமுறைப்படுத்தியுள்ள அடிப்படை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரும் தேர்தல் பணிபுரிய வேண்டும். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை சமூக இடைவெளியில் வரிசைப்படுத்தி, நோய்த்தொற்று பரவாமல் அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற, உங்களது பணி சிறப்பாக அமைய வேண்டும்.
தேர்தல் பணி
மாணவர்களாகிய உங்களிடம், காவல்துறையினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ, அதேபோன்று வாக்காளர்களிடம் நீங்கள் கனிவாக பேச வேண்டும். நமது மாவட்டத்திற்கும், நாட்டிற்கும் ஒரு நல்ல பெயரை உருவாக்கித்தரும் வகையில் உங்கள் பணி அமைய வேண்டும். தேர்தல் பணியானது அங்கீகரிக்கப்பட்ட ஒரு பணியாகும். அதை நன்கு புரிந்து கொண்டு, பணிபுரிய வேண்டும் என்றார்.
பின்னர் அவர் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பெரியார் அரசு கலைக்கல்லூரி உள்பட 22 கல்லூரிகளை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story