அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு
அ.தி.மு.க. பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் சி.வி.சண்முகம், தொகுதிக்குட்பட்ட பகுதியில் கிராமம், கிராமமாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த 31-ந் தேதியன்று விழுப்புரம் நகர பகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வண்டிமேடு, அலமேலுபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபோது அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அன்பளிப்பாக பணம் வழங்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு
இதுபற்றி விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் சந்துரு, விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், வேட்பாளர் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.
அதன்பேரில் நகர பாசறை செயலாளர் கிருஷ்ணன், அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஆரத்தி எடுத்த பெயர் விலாசம் தெரியாத பெண்கள் மீது அன்பளிப்பு வழங்குதல், வேட்பாளருக்கு ஆதரவாக விளம்பரப்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story