72 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 72 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயது முதல் 59 வயது வரை சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட மொத்தம் 43 மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
பரிசோதனை அதிகரிப்பு
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
முககவசம் அணியாமல் இருப்பதே கொரோனா பரவுவதற்கான முக்கிய காரணம். எனவே அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். நீலகிரியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தற்போது தினமும் 1,200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனியார் தேயிலை தோட்டங்கள், தொழிற்சாலைகளில் ஒரே இடத்தில் அதிகம் பேர் பணிபுரிவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அங்கு நடமாடும் வாகனம் மூலம் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
போதுமான மருந்துகள்
நீலகிரியில் இதுவரை 72 ஆயிரத்து 830 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்தலாம்.
ஊட்டி அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை கூடத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆதார் அடையாள அட்டை அல்லது ஏதேனும் ஒரு ஆவணத்தை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இதன் விவரங்கள் கோவின் என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. போதுமான தடுப்பு மருந்துகள் இருப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story