நுண் தேர்தல் பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில் தொகுதி ஒதுக்கீடு


நுண் தேர்தல் பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில் தொகுதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 3 April 2021 12:54 AM IST (Updated: 3 April 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நுண் தேர்தல் பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தூத்துக்குடி, ஏப்:
தூத்துக்குடி மாவட்டத்தில் நுண் தேர்தல் பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொகுதி ஒதுக்கீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 307 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசு ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் சுழற்சி முறையில் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர்கள் ஜூஜவரப்பு பாலாஜி (தூத்துக்குடி), அஸ்வானி குமார் சௌதாரி (விளாத்திகுளம், கோவில்பட்டி), சுஷில் குமார் படேல் (திருச்செந்தூர்), சவின் பன்சால் (ஸ்ரீவைகுண்டம்), அனில் குமார் (ஓட்டப்பிடாரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கம்ப்யூட்டரில் சுழற்சி முறையில் தொகுதிகளுக்கு நுண்பார்வையாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 97 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 302 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்றும் 5 வாக்குச்சாவடிகள் மிக பதட்டமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன.
நமது மாவட்டத்தில் மொத்தம் 330 நுண் பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நுண் பார்வையாளர்கள் செல்லக்கூடிய சட்டமன்ற தொகுதி சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டது. விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு 50 நுண் பார்வையாளர்களும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 71 நுண் பார்வையாளர்களும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 48 நுண் பார்வையாளர்களும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு 38 நுண் பார்வையாளர்களும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு 58 நுண் பார்வையாளர்களும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு 42 நுண் பார்வையாளர்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளனர். தேர்தல் நடைபெறுவதற்கு முன்தினம் நுண் பார்வையாளர்களுக்கு தாங்கள் செல்லக்கூடிய வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்று கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் விஷ்ணுசந்திரன், தேசிய தகவல் மைய அலுவலர் சரவணன், தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story