தாமிரபரணி குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை தேவை


தாமிரபரணி குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை தேவை
x
தினத்தந்தி 3 April 2021 1:11 AM IST (Updated: 3 April 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் நகர் பகுதி முழுவதும் தாமிரபரணி குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர், 
விருதுநகரில் நகர் பகுதி முழுவதும் தாமிரபரணி குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம் 
விருதுநகரில் நகர் பகுதியில் தாமிரபரணிகூட்டு குடிநீர் திட்டம் மூலமும், ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் இருந்து நிலத்தடி நீர் ஆதாரம் மூலமும் பெறப்படும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்தும் மற்றும் ஆனைக்குட்டம் பகுதியிலிருந்தும் பெறப்படும் குடிநீர் அனைத்துப்பகுதிகளிலும் சீரான முறையில் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
மாற்றம் 
 தற்போது நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோக முறையில் மாற்றம் செய்துள்ளதாக  கூறப்படுகிறது.  இதனால் நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் ஆனைக்குட்டத்திலிருந்து பெறப்படும் நிலத்தடி நீர் ஆக உள்ளதால் அந்த குடிநீரை குடிப்பதற்கு முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துர்நாற்றம் 
 மேலும் அந்தக்குடிநீரை 2  நாட்கள் இருப்புவைத்திருந்தால் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
 இதனால் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்தும் அது பயன் இல்லாத நிலையில், விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
கோரிக்கை 
எனவே நகராட்சி நிர்வாகம் இதுபற்றி முறையாக ஆய்வு செய்து வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் போது நகர் முழுமைக்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் கிடைக்கும் குடிநீரையும், ஆனைக்குட்டத்தில் இருந்து பெறப்படும் குடிநீரையும் கலந்து வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகத்தில் பாரபட்சம் காட்டப்படுவது ஏற்புடையது அல்ல. எனவே இதுகுறித்து கலந்தாய்வு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story