பணம், பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை கடலூரில் சகாயம் ஐ.ஏ.எஸ். பேட்டி


பணம், பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை   கடலூரில் சகாயம் ஐ.ஏ.எஸ். பேட்டி
x
தினத்தந்தி 2 April 2021 8:33 PM GMT (Updated: 2 April 2021 8:33 PM GMT)

சகாயம் ஐ.ஏ.எஸ். பேட்டி

கடலூர், 
கடலூர் சட்டமன்ற தொகுதியில் சகாயம் அரசியல் பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புஷ்பராஜை ஆதரித்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நேற்று கடலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 
தமிழகத்தில் சகாயம் அரசியல் பேரவை சார்பில் இந்த தேர்தலில் 17 சட்டமன்ற தொகுதிகளில் இளைஞர்களை களம் இறக்கி உள்ளோம். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் உள்ளது. அந்த இருகட்சியினருமே தேர்தல் பிரசாரத்தின் போது ஒருவரையொருவர் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இதுபோன்ற ஊழல் கட்சிகளுக்கு, மாற்று கட்சி தேவைப்படுகிறது.
மேலும் சாதி, மதம், பேதமின்றி அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் மதத்தின் பெயரில் பா.ஜ.க. அரசியல் செய்ய முயற்சிக்கிறது. அதனால் பா.ஜ.க.வை நிராகரிக்க வேண்டும். நான் பதவி, பணத்துக்காக அரசியலுக்கு வரவில்லை. வருங்கால தலைமுறையினருக்காகவும், ஊழலை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் அரசியலுக்கு வந்துள்ளேன். ரஜினிக்கு விருது வழங்கப்பட்டதை அரசியலாக பார்க்கவில்லை. அவர் நல்ல நடிகர், அவரது சிறந்த நடிப்பின் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர். அவருக்கு விருது வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இவ்வாறு சகாயம் ஐ.ஏ.எஸ். கூறினார்.

Next Story