போடி சட்டமன்ற தொகுதியில் தீவிர பிரசாரம்: அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யாமல் விட்டதில்லை - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


போடி சட்டமன்ற தொகுதியில் தீவிர பிரசாரம்: அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யாமல் விட்டதில்லை - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 3 April 2021 11:06 AM GMT (Updated: 3 April 2021 11:06 AM GMT)

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யாமல் விட்டதில்லை என்று போடி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி, 

போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:-

5 ஆண்டுக்கு ஒருமுறை சட்டமன்ற தேர்தல் வருகிறது. எல்லா கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் கள். ஜெயலலிதா 2011&ம் ஆண்டும், 2016&ம் ஆண்டும் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அதில் சொன்ன எல்லா திட்டங்களையும் நலத்திட்டங்களாக வழங்கி வருகிறோம்.

2006-ம் ஆண்டு தி.மு.க.வி னர் டி.வி. வழங்கினார்கள். கருணாநிதி வழங்கிய டி.வி.க் கள் வெடித்துவிட்டன. 2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில், 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால், கொடுக்கவில்லை. சட்டசபையில் முதல்-அமைச்சராக கருணாநிதி அமர்ந்து இருந்தபோது, நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தேன். அப்போது, 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினீர்களே, 2 ஆண்டுகள் ஆகிவிட்டது எப்போது வழங்குவீர்கள் என்று கேட்டேன். உடனே அவருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் எழுந்து கையளவு நிலமாவது தருவேன் என்றார். ஆனால், தரவில்லை.

இப்போது அவருடைய மகன் ஸ்டாலின் மக்களை ஏமாற்ற தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாமும் தேர்தல் அறிக்கை அறிவித்துள்ளோம். தி.மு.க. தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு. அது செல்லாது. நாம் அறிவித்து உள்ள அறிக்கை தான் நல்லநோட்டு. நம்முடைய தேர்தல் அறிக்கையில், திருமண நிதியுதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்று கூறியுள்ளோம். நிச்சயமாக அதை வழங்குவோம். பட்டம் படித்த பெண்களின் திருமண நிதியுதவியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம். கர்ப்பிணிகளுக்கு பேறுகால நிதியாக ரூ.18 ஆயிரம் வழங்கி வருகிறோம். இனிமேல் அதை ரூ.21 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.

மகளிருக்கு அம்மா குலவிளக்கு திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1,500 அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம். விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். பெண்களின் பணிச்சுமையை குறைக்க விலையில்லா வாஷிங்மெஷின் கொடுப்போம். ஆண்டுக்கு விலையில்லா 6 கியாஸ் சிலிண்டர்கள் தருவோம். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இதுவரை சொன்னதை செய்யாமல் விட்டதில்லை. 

போடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. உங்களில் ஒருவனாக இருந்து சேவையாற்ற மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சற்குணம் மற்றும் அதி.மு.க., கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதுபோல், வீரபாண்டியில் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகனும், கைலாசநாதர் மலைக்கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்புக்குழு தலைவர் ப.ஜெயபிரதீப் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். வீரபாண்டி பகுதிகளிலும், போடி தொகுதியிலும் கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ள அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கூறியும், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் விளக்கிப் பேசி வாக்குசேகரித்தார்.

Next Story