குஷ்புவின் வெற்றியை உறுதி செய்த ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள்


குஷ்புவின் வெற்றியை உறுதி செய்த ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள்
x
தினத்தந்தி 3 April 2021 6:30 PM GMT (Updated: 3 April 2021 5:40 PM GMT)

குஷ்புவின் வெற்றியை ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் உறுதி செய்தனர்.

ஆயிரம் பேர் மறைத்து நின்றாலும், ஆயிரம் கட்சிகள் பொய் வாக்குறுதிகள் அளித்தாலும் ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள குஷ்பூவின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை குஷ்பூ போன்ற பல பெண்கள் நிரூபித்து காட்டி வருகின்றனர். அதற்கு சிறந்த உதாரணமாக எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக எனும் பேரியக்கத்தை கட்டிக் காத்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை கூறலாம். நானும் ஜெயலலிதாவைப் போலவே திமுகவினரால் அவமானப்படுத்தப்பட்டேன் என குஷ்பூ என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் விட்டாரோ? அன்றிலிருந்தே ஆயிரம் விளக்கில் திமுகவின் பிரகாசம் பீஸ் போய்விட்டது.

இப்போது ஆயிரம் விளக்கில் குஷ்பூவிற்கு அடிக்கும் ஆதரவு அலையை பார்த்து பாஜகவின் தொண்டர் படை மகிழ்ச்சியில் திளைக்கிறார்களாம். ஆயிரம் விளக்குத் தொகுதியில் உங்கள் தேவைகளை அறிந்து சேவையாற்றிட உங்கள் அன்புச் சகோதரிக்கு வாக்களியுங்கள் என சுந்தர் சியும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பது குஷ்பூவின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. 10 ஆண்டுகளாக வனவாசத்தில் இருந்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரத் துடிக்கிறது தீயசக்தி திமுக, 17 ஆண்டுகளாய் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராய் இருந்தவர் இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின். 17 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராய் ஒருவர் இருந்திருக்கிறார் என்றால் அந்தத் தொகுதியை எப்படி அவர் முன்மாதிரியான தொகுதியாக மாற்றி இருக்க வேண்டும். 

அதையெல்லாம் விட்டுவிட்டு அத்தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொடுக்காமல் வைத்திருக்கும் வஞ்சகமான கட்சிதான் திமுக என குஷ்பூவும் சளைக்காமல் விளாசி வருகிறார். இதனால் குஷ்பூ கூறுவதில் உள்ள உண்மைகளை ஆயிரம் விளக்கு தொகுதிவாசிகள் சிந்திக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் குஷ்பூவிடம் குடிநீர் வசதி, போக்குவரத்து நெரிசல், இரவு நேர சிறார் பாடசாலை, கொசுத்தொல்லை, கழிவுநீர்க் கால்வாய் சீரமைப்பு என இன்னும் தங்கள் தொகுதி கோரிக்கைகளைப் பட்டியலிடுகிறார்கள் ஆயிரம் விளக்குத் தொகுதிமக்கள். அவர்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் நிச்சயம் நான் நிறைவேற்றித்தருவேன். நான் மற்ற அரசியல்வாதிகள் மாதிரி கிடையாது சொன்னதை செஞ்சிகாட்டுவேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார் குஷ்பூ. முகத்தில் சிரிப்பு, கண்ணில் கனிவு, குட்டீஸிடம் அன்பு என பம்பரமாய் சுழன்று வாக்கு சேகரிக்கும் குஷ்பூவை அப்பகுதி மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

டாக்டர் கருணாநிதி எனும் தலைவர் உழைத்து வளர்த்த கட்சியின் நிழலில் அமர்ந்து அதன் பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஸ்டாலினுக்கு இன்று கிடைக்கும் மரியாதைக்கு காரணம் அவர் பெயரின் முன்னிருக்கும் மு.க என்னும் முதலெழுத்து தான். தலைவராக ஸ்டாலின் சாதித்தது என்ன? திமுகவினரால் பட்டியலிட முடியுமா? என சகட்டுமேனிக்கு ஸ்டாலினை நோக்கி கேள்விக்கணைகள் பாய்ந்து வருகிறது. இதையே தன் தொகுதி மக்களிடம் மீண்டும், மீண்டும் வலியுறுத்தும் குஷ்பூ, பத்தாண்டு காலம் தொடர்ந்த நல்லாட்சி மீண்டும் தொடர நீங்கள் வாக்களிக்க வேண்டியது பா.ஜ.க - அதிமுக கூட்டணிக்கு. சென்னையின் மையமாக விளங்கும் ஆயிரம் விளக்குத் தொகுதி பெயரைப் போலவே ஜொலி, ஜொலிக்க தாமரைக்கு வாக்களிப்பீர் என தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

Next Story