கரூர் உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேட்டி


கரூர் உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேட்டி
x
தினத்தந்தி 3 April 2021 6:48 PM GMT (Updated: 3 April 2021 6:48 PM GMT)

கரூர் மாவட்டத்தில் 123 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளது. மேலும் கரூர் உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கூறினார்.

கரூர்
பேட்டி
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேற்று கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரசாந்த் மு.வடநேரே மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
123 பதற்றமான வாக்குச்சாவடிகள்
கரூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை சட்டப்படி நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,274 வாக்குச்சவாடிகள், 623 அமைவிடங்கள் உள்ளன. மொத்தம் உள்ள வாக்குச்சாவடிகளில் 123 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 1,274 வாக்குச்சாவடிகளுக்கும் 6,112 ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 
இவர்களுக்கு, நாளை (திங்கட்கிழமை) எந்த வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும் என்ற பணி ஆணை வழங்கப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 64 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளன்று மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள்.
கண்காணிப்பு கேமரா
கரூர் மாவட்டத்தில் 837 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராவுடன் வெப் ஸ்டீரிமிங் வசதி செய்யப்பட்டு வருகிறது. கரூர் தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், மற்ற 3 தொகுதிகளில் 50 சதவீத வாக்குச்சாவடிகளிலும் (பதற்றமான வாக்குச்சாவடிகளையும் சேர்த்து) வெப் ஸ்டீரிமிங் வசதி செய்யப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி முறை குலுக்கல் மற்றும் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நிறைவுபெற்று சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 
தேர்தலில் மொத்தம் 4,710 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,530 கட்டுப்பாட்டு கருவிகளும், 1,645 வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. 
24 மணி நேரமும்...
கரூர் மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையின் 5 குழுக்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட சுவர் விளம்பரம், சுவரொட்டிகள், பேனர்கள், கொடி கம்பங்கள், தட்டிகள் உள்ளிட்ட மொத்த 44 ஆயிரத்து 839 எண்ணிக்கையிலான தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக 116 எண்ணிக்கையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பாக ஏதேனும் புகார்கள் தெரிவிக்க விரும்பினால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையினை 1950 மற்றும் 18004255457 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
நியாமான முறையில் தேர்தல்
வாக்குப்பதிவு நாளில் பயன்படுத்தப்படவேண்டிய பொருட்கள் அனைத்தும் அந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 
வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு உடல்வெப்பத்தை பரிசோதனை செய்வதற்கு சுகாதார அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அனைவரின் ஒத்துழைப்புடன், சட்டப்படி, நியாயமான முறையில், வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடத்தப்படும். 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 
அறிவுரை
முன்னதாக வேலாயுதம்பாளையம், மண்மங்கலம், கரூர் நகராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர், சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நடத்தப்பட்டு வந்த பயிற்சி வகுப்பினையும் பார்வையிட்டு அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Next Story