சுகாதார ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு


சுகாதார ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 3 April 2021 9:29 PM GMT (Updated: 2021-04-04T02:59:40+05:30)

பெரம்பலூரில் சுகாதார ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச்சென்றனர். வீட்டில் வேறொரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன் நகைகள் தப்பியது.

பெரம்பலூர்:

சுகாதார ஆய்வாளர்
பெரம்பலூர் மாவட்டம் நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் பிரபாகரன் (வயது 32). இவா் குன்னம் தாலுகா முருக்கன்குடியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். பிரபாகரன் தனது குடும்பத்தினருடன் பெரம்பலூர் ரோஸ் நகர் விஸ்தரிப்பு பகுதியில் வாடகை வீட்டில் முதல் தளத்தில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 1-ந் தேதி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றார். இந்த நிலையில் நேற்று காலை பிரபாகரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக பிரபாகரனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.
பணம் - கொலுசு திருட்டு
இதையடுத்து அவர், அவர்களிடம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம்- நகைகள் உள்ளதா? என்று பார்க்குமாறு தெரிவித்தனர். அதன்படி அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 ஆயிரமும், ஒரு ஜோடி வெள்ளி கொலுசையும் மர்மநபர்கள் திருடிச்சென்றதும், வீட்டிற்குள் வேறொரு இடத்தில் இருந்த 22 பவுன் நகைகள் மர்மநபர்கள் கண்ணில் படாததால், அந்த நகை தப்பியதும், தெரியவந்தது.
மற்றொரு வீட்டில்...
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மனைவி சந்திரா(56). பெரியசாமி ஏற்கனவே இறந்து விட்டதாலும், குழந்தைகள் இல்லாததாலும் சந்திரா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று அதிகாலை மர்மநபர்கள் சந்திராவின் வீட்டின் ஜன்னலை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு சந்திரா எழுந்து வந்ததை கண்ட மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடங்களுக்கு நேற்று காலை சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் புகார்களின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story