துணை ராணுவ வீரர்கள்-போலீசார் கொடி அணிவகுப்பு


துணை ராணுவ வீரர்கள்-போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 3 April 2021 9:30 PM GMT (Updated: 2021-04-04T03:00:45+05:30)

பெரம்பலூரில் மத்திய துணை ராணுவ படைவீரர்கள்-போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

பெரம்பலூர்:

கொடி அணிவகுப்பு
சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதனை வலியுறுத்தியும் மத்திய துணை ராணுவ வீரர்கள், போலீசார், கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையினர் சார்பில் கொடி அணிவகுப்பு பெரம்பலூர் துறைமங்கலத்தில் நேற்று மாலை நடந்தது.
துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தின் அருகே இருந்து தொடங்கிய அணிவகுப்பினை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தொடங்கி வைத்து, அவரும் அணிவகுப்பில் பங்கேற்று நடந்து சென்றார்.
துப்பாக்கி ஏந்தி...
இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் துப்பாக்கிகள் ஏந்தியும், பாதுகாப்பு கவசங்களுடன் ஊர்வலமாக சென்றனர். இந்த அணிவகுப்பு துறைமங்கலத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று டி.இ.எல்.சி. பள்ளி அருகே முடிவடைந்தது. இதேபோல் சங்குப்பேட்டை, எளம்பலூர் ரோடு, வடக்கு மாதவி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆரோக்கிய பிரகாசம், நீதிராஜ், ராஜாராம், சுப்பிரமணியன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், மோகன்தாஸ், பெனாசீர் பாத்திமா, மாயவன், மதுமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், கோபிநாத், ரவீந்திரன், சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்- குன்னம் தொகுதிகளில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 175 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவின்போது மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு பணியில் 630 போலீசார்
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தலன்று 630 போலீசாரும், முன்னாள் ராணுவ வீரர்கள், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், ஓய்வு பெற்ற சிறை காவலர்கள் என 78 பேரும், 204 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் துணை ராணுவ படை வீரர்களில் ஒரு கம்பெனியை சேர்ந்த 92 பேரும், சித்திரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த 75 ஊர்க்காவல் படைவீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Next Story