மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் நடிகர் வாகை சந்திரசேகர் பேச்சு


மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் நடிகர் வாகை சந்திரசேகர் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2021 5:56 AM GMT (Updated: 4 April 2021 5:56 AM GMT)

திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேருவுக்கு ஆதரவாக பிரசாரம் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் நடிகர் வாகை சந்திரசேகர் பேச்சு

திருச்சி, 

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வாகை சந்திரசேகர் திருச்சியில் நேற்று பிரசாரம் செய்தார். திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகே வாகை சந்திரசேகர் பேசியதாவது:-

இந்த தொகுதியில் போட்டியிடும் கே.என்.நேரு வெற்றி பெற்றுவிடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எவ்வளவு ஓட்டு வித்தியாசம் என்பதை தான் பார்க்க வேண்டும். வெற்றி பெற்று கே.என்.நேரு கோட்டைக்கு செல்லும்போது அங்கு அவரை ஸ்டாலின் வரவேற்பார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரானது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். அவரை மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கவில்லை.

கருணாநிதி ஆட்சியின்போது, அனைத்துத்துறைகளிலும் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்ந்தது. இப்போது தமிழகம் கடைசி மாநிலமாக மாறிவிட்டது. தமிழக இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் இங்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். இதை தடுக்க ஸ்டாலினால் மட்டும் தான் முடியும். ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். சீமான் நன்றாக தான் பேசுகிறார். ஆனால் அவரது திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியுமா?. நடிகர் கமல் பிக்பாஸ் முடிந்துவிட்டதால் வேறு வேலை இல்லாததால் அரசியலுக்கு வந்துவிட்டார். நானும் சினிமாக்காரன் தான். என்னடா, சினிமாவில் இருந்து கொண்டே சினிமாக்காரர்களை குறைகூறுவதாக நினைக்கக்கூடாது. நான் அரசியலுக்கு இன்று, நேற்று வரவில்லை. 50 ஆண்டுகள் தி.மு.க.வில் தொண்டனாக இருந்துள்ளேன். இந்த தொகுதியை பற்றி நன்கு அறிந்தவர் கே.என்.நேரு. அவர் சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, அவரது கேள்விகளுக்கு யாராலும் பதில் கூறமுடியாது. ஆகவே மக்கள் அனைவரும் நேரு வெற்றி பெறுவதற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது வேட்பாளர் கே.என்.நேரு உடன் இருந்தார்.

Next Story