விராலிமலை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் தி.மு.க.வேட்பாளர் பழனியப்பன் வாக்குறுதி


விராலிமலை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் தி.மு.க.வேட்பாளர் பழனியப்பன் வாக்குறுதி
x
தினத்தந்தி 4 April 2021 6:10 AM GMT (Updated: 4 April 2021 6:10 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் விராலிமலை பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது.

விராலிமலை, 

விராலிமலை தொகுதியில் நான் 3-வது முறையாக போட்டியிடுகிறேன். பிரசாரத்துக்காக  நான் செல்லும் இடங்களில் எல்லாம் தாய்மார்கள்  நல்ல வரவேற்பு கொடுத்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பெண் இனத்தை தூக்கி நிறுத்துகின்ற வகையில் 100 நாள் வேலையை 150 நாட்களாக மாற்றி  ரூ.300 சம்பளம் என்றும் அறிவித்திருக்கிறார். அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமத்தொகை, கொரோனா காலத்தில் தற்போதைய அரசிடம் தி.மு.க. ரூ.5 ஆயிரம் நிவாரணம் கொடுக்க அறிவுறுத்தியது. ஆனால் ரூ.1,000 மட்டுமே மக்களுக்கு கொடுத்தார்கள். மீதமுள்ள அந்த ரூ.4 ஆயிரத்தை ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்தநாள் அன்று அனைவருக்கும் வந்து சேரும்.

மாணவ-மாணவிகள் கல்வி கடன் வாங்கி இருந்தால் அது முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். சுய உதவிக்குழுவில் கடன் வாங்கி இருந்தாலும் அதுவும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த தொகுதியில் உள்ள மகளிர் படிக்க அரசு கலை கல்லூரி அமைக்கப்படும். 

விராலிமலை அரசு மருத்துவமனையை ரூ.50கோடி முதல் ரூ.100 கோடி வரை நிதி ஒதுக்கி அனைவரும் மருத்துவ வசதி பெரும் வகையில் தரம் உயர்த்தி மிகப்பெரிய மருத்துவமனையாக ஆக்கி காட்டுவோம். எனவே அனைவரும் உங்களது வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து என்னை வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story