சட்டமன்ற தேர்தல் 11 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் கலெக்டர் தகவல்


சட்டமன்ற தேர்தல் 11 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 April 2021 6:23 AM GMT (Updated: 4 April 2021 6:23 AM GMT)

சட்டமன்ற தேர்தலையொட்டி 11 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க மாவட்ட நிர்வாகம் அரசு அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

11 ஆவணங்கள்

இந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் அடையாளம் காட்டும் நோக்கத்திற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்காளர்கள் தங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story