மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு மிகச்சிறந்த ஆட்சி தருவது அ.தி.மு.க. அரசு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு மிகச்சிறந்த ஆட்சி தருவது அ.தி.மு.க. அரசு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2021 6:58 AM GMT (Updated: 4 April 2021 6:58 AM GMT)

மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு மிகச்சிறந்த போடி தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரம், ஆட்சியை தரும் அரசு அ.தி.மு.க. அரசு என்று போடியில் பிரசாரம் செய்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தேனி,

போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் களம் காண்கிறார்.  தேர்தல் பிரசாரம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) ஓய்வதால், ஓ.பன்னீர்செல்வம் இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டார்.

இந்த பிரசாரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தமிழகத்தில் ஜெயலலிதா பொற்கால ஆட்சி நடத்தினார். மக்களிடம் இருந்து பெறும் வரிவருவாயை, நலத்திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மீண்டும் கொண்டு சேர்த்தார். அவ்வாறு செயல்படுத்திய திட்டங்கள் யாவும் தொலைநோக்கு திட்டங்களாக, அடுத்த தலைமுறையினரும் பயன்பெறும் திட்டங்களாக செயல்படுத்தினார். மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு மிகச் சிறப்பான நல்ல திட்டங்களை அறிவித்து, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி மக்களுக்கான நல்லாட்சி நடத்தி வரும் ஒரே அரசு ஜெயலலிதா அரசு.

கடந்த 2011-ம் ஆண்டு மற்றும் 2016-ம் ஆண்டுகளில் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, நலத்திட்டங்களாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவியேற்றதும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சொன்னது போல், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் என்பதை 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கினோம். தற்போது நிதி உதவியை உயர்த்தி வழங்குவோம் அம்மா குலவிளக்கு திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை ரூ.1, 000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

2023-ம் ஆண்டுகளில் தேனி மாவட்டம் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் வீடற்ற மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும். அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

அரசு பொறியியல் கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என பல்வேறு கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. உங்களில் ஒருவனாக இருந்து மக்களுக்கு சேவையாற்ற மீண்டும் எனக்கு வாய்ப்பு அளித்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அதுபோல், போடி தொகுதி முழுவதும் அ.தி.மு.க.வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். வீரபாண்டி, வயல்பட்டி பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், கைலாசபட்டி கைலாசநாதர் கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் தலைமையில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

Next Story