மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 4 April 2021 5:21 PM GMT (Updated: 4 April 2021 5:21 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு அருகே ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மூங்கில்துறைப்பட்டு

ஆசிரியர்

மூங்கில்துறைப்பட்டு அருகே மங்கலம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் மகிமைதாஸ்(வயது 41). ஆசிரியரான இவர் நேற்று முன்தினம் இரவு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தனது மனைவி குழந்தைகளுடன் ஈருடையாம்பட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றார். 

அங்கு பிரார்த்தனை முடிந்து மறுநாள் அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்கு வந்த மகிமைதாஸ் வீட்டில் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. அதில் இருந்த துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்ததன. 

நகைகள் கொள்ளை

மேலும் பீரோவில் இருந்த வளையல், மோதிரம், சங்கிலி, மூக்குத்தி என 14 பவுன் நகைகள் மற்றும் 2 ஜோடி வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை காணவில்லை. மகிமைதாஸ் இரவில் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றதை அறிந்து கொண்டு மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அறிந்து திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ் தலைமையில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜவேல், தட்சிணாமூர்த்தி ஆகியோர் பீரோ, கதவுகளில் இருந்த கைரேகைகளை சேகரித்து சென்றனர்.  பின்னர் இதுகுறித்து மகிமைதாஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மற்றொரு வீ்ட்டில் கொள்ளை

மேலும் அதே பகுதியை சேர்ந்த சந்தியாகு மகன் செல்வம் அந்தோணி(48) என்பவரின் வீட்டிலும் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். மகிமைதாஸ் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களே செல்வம் அந்தோணி வீட்டிலும் புகுந்து பணத்தை கொள்ளையடித்துச்சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

மூங்கில்துறைப்பட்டு அருகே அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஈருடையாம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பண்டிகை காலங்களில் இரவு நேரங்களில் ஆலயத்திற்கு செல்பவர்களின் வீட்டை மர்மநபர்கள் நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்கதைபோல நடந்து வருகிறது. எனவே இந்த பகுதிகளில் இரவு நேரம் போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story