வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா?


வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா?
x
தினத்தந்தி 4 April 2021 5:46 PM GMT (Updated: 4 April 2021 5:46 PM GMT)

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுக்கிறார்களா? என்று கலெக்டர், கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்து வருகின்றனர்.

விழுப்புரம், 

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் பூத் சிலிப் வழங்கி வருகின்றனர்.
மேலும் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்கிறார்களா? என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ஆ.அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் ஆகியோர் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், பானாம்பட்டு பகுதிகளில் கலெக்டர் அண்ணாதுரை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் தனிப்பட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வலியுறுத்தி யாரேனும் மிரட்டுகின்றனரா? அல்லது ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? என்றும் விசாரித்தார்.
மேலும் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்பை தனி நபர் ஒருவர் வழங்குவதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தலைமையிலான குழுவினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து வி.மருதூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர், கூடுதல் கலெக்டரின் வாகனத்தை பார்த்தவுடன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். சிறிது நேரத்தில் வேறு ஒருவர் அந்த மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, அவரை பிடித்து, அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் சாவியை வாங்கி அதன் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ரூ.3 ஆயிரமும், வாக்காளர்கள் பட்டியலும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளையும், பணத்தையும் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்து வழக்குப்பதிவு செய்ய கூடுதல் கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story