மின்னணு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்படும்


மின்னணு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்படும்
x
தினத்தந்தி 4 April 2021 7:17 PM GMT (Updated: 4 April 2021 7:17 PM GMT)

மின்னணு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்

ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மண்டலம் வாரியாக பிரித்து வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் உள்ள வாகனங்களை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:- 
வாக்குப்பதிவினை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்கான தேர்தல் தளவாட பொருட்கள் அனைத்தும் முறையே சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளுக்காக பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 30, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 31, திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 34, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 35 என மொத்தம் 130 மண்டல அளவிலான தேர்தல் பணி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் தளவாட பொருட்களை வாகனத்தின் மூலம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக கொண்டு சென்று ஒப்படைப்பார்கள். இவ்வாகனங்களின் நகர்வுகள் அனைத்தும் ஜி.பி.எஸ்.் கருவிகள் மூலம் கண்காணிக்கப்படும் என தெரிவித்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் லயோலா இக்னேசியஸ், ஜெயசிங், வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்முகமது ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story