மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியதால் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்


மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியதால் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்
x
தினத்தந்தி 4 April 2021 7:33 PM GMT (Updated: 4 April 2021 7:33 PM GMT)

அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்

கோவை

கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு தான் நடைபெற்றுள்ளது. மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியதால் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது

வளர்ச்சி திட்டங்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதியிலும் 50 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம். கோவையில் அனைத்து சாலைகளும் புதிதாக போடப்பட்டுள்ளது. அதில், பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் விபத்து, உயிரிழப்புகள் குறைந்துள்ளன.


மாவட்டத்தில் 6 புதிய கல்லூரிகளை கொடுத்துள்ளோம். கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.6 ஆயிரம் கோடியில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்திக்கடவு- அவினாசி திட்டம், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட நீண்ட நாட்களாக முடிக்கப்படாத பணிகள் நிறைவேற்றப் பட்டு உள்ளன. இந்தியாவிலேயே கோவை மாவட்டத்தில் தான் அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் அதிக வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.

சட்டம் - ஒழுங்கு

அரசு மருத்துவமனை அற்புதமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ரூ.25 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கு நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் கட்டி தந்துள்ளோம். 

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கட்டப்பஞ்சாயத்து இல்லை. வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. நீலகிரி,  திருப்பூருக்கு புதிய மருத்துவ கல்லூரி கொடுத்து உள்ளோம்.

கோவை மாவட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாம் கேட்ட திட்டங்களை எல்லாம் கொடுத்துள்ளார். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு, விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை வழங்கிய சாமான்ய முதல்- அமைச்சர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

21 தொகுதிகள்

கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 21 தொகுதியிலும் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவோம். கொரோனா காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு கொடுத்தோம். காய்கறி மளிகை சாமான்கள் கொடுத்தோம்.

தற்போது அ.தி.மு.க. சார்பில் அற்புதமான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை நிறைவேற் றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை ஆள வேண்டும் என மக்கள் முடிவெடுத்துவிட்டனர். 

எனவே அ.தி.மு.க.  மீண்டும் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் வீட்டில் தான் வருமான வரித் துறை சோதனை நடைபெறுகிறது. தி.மு.க.வினர் தான் தவறான போக்கை கையாண்டு வருகிறார்கள்.

என் மீது கோபம்

அ.தி.மு.க. ஆட்சியை கடந்த 4 ஆண்டுகாலம் சிறப்பாக செயல்பட நானும் ஒரு காரணம் என்பதால் மு.க.ஸ்டாலினுக்கு என் மீது கோபம். எனவே என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். 

இன்றைய கள நிலவரம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராக வர வேண்டும் என மக்கள்முடிவெடுத்து விட்டனர்.எனவே தற்போது கருத்து கணிப்பு என்ற பெயரில். கருத்து திணிப்புகள் தான் நடக்கிறது. 

தொண்டாமுத்தூர் தி.மு.க. வேட்பாளரை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மாநில குரும்பர் சங்கம் அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

பத்திரிகையாளர்களை தொடர்ந்து தி.மு.க.வினர் தாக்கி வருகின்றனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படி என்றால் ஆட்சிக்கு வந்தால் எப்படியிருக்கும். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story