பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்ற மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: புதிய வணிக விடியலுக்கு, வணிகர்கள் அடித்தளம் அமைக்கவேண்டும்


பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்ற மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: புதிய வணிக விடியலுக்கு, வணிகர்கள் அடித்தளம் அமைக்கவேண்டும்
x
தினத்தந்தி 5 April 2021 3:06 AM GMT (Updated: 5 April 2021 3:06 AM GMT)

பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்ற மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: புதிய வணிக விடியலுக்கு, வணிகர்கள் அடித்தளம் அமைக்கவேண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா அறிக்கை.

சென்னை, 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோரிக்கைகளை கேட்டு பெற்றிருந்த நிலையில், அவற்றை சீர்தூக்கி பார்த்ததில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் வணிகர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் இடம் பெற்றிருக்கின்றன. எங்களுடைய பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கிற தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அமைய உள்ள புதிய அரசு, 'சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம்' என்ற தாரக மந்திரத்தை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்ற உறுதியுடனும், வணிகர்களின் நலனும் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையுடனும், நமது வணிக சமுதாயம், வணிகர்களுக்கான ஒரு அரசை அமைத்துக்கொள்ள உங்களின் வாக்குரிமையை தேர்தலில் 100 சதவீதம் பயன்படுத்தவேண்டும். இதன்மூலம் புதிய வணிக விடியலுக்கு அடித்தளம் அமைக்கவேண்டும்.

38-வது வணிகர் தின மாநில மாநாடு, 'இந்திய வணிகர் பேரிடர் விடியல்' மாநாடாக சென்னையில் வருகிற மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டினை மிகப் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் நடத்த, அனைத்து மண்டல, மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஆயத்தப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story