144 தடை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை என்றால் ரத்து புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை


144 தடை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை என்றால் ரத்து புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 April 2021 3:17 AM GMT (Updated: 5 April 2021 3:17 AM GMT)

144 தடை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை என்றால் ரத்து புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை.

சென்னை, 

தமிழகத்தை போல புதுச்சேரியிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் நேற்று இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில்,

தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி புதுச்சேரி மாநிலத்தில் வருகிற 7-ந்தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார்.

இந்த 144 தடை உத்தரவு சட்டவிரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், மார்ஸ்சிட் கம்யூனிஸ்டு கட்சியின் (சி.பி.எம்.) புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் அவசர வழக்கு தொடர்ந்தார்.

விடுமுறை தினமான நேற்று மாலை காணொலி வாயிலாக இந்த அவசர வழக்கை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்றிரவு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளதற்கு அரசு தரப்பில் உரிய காரணமோ அல்லது விளக்கமோ அளிக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தலைக் காரணம் காட்டி பொத்தாம் பொதுவாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க இயலாது. தேர்தலுக்கு முன்பாக 48 மணி நேர ‘சைலன்ஸ் பீரியடு’ என்பது அமைதியான தேர்தலுக்காகவே வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த 144 தடை உத்தரவு எந்தெந்த காரணங்களுக்காக மட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் இந்த உத்தரவை ரத்து செய்ய நேரிடும்.

இவ்வாறு புதுச்சேரி அரசுக்கு எச்சரித்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Next Story