திருவொற்றியூரில் தி.மு.க.வினரை தாக்கிய அ.தி.மு.க.வினர் 2 பேர் கைது


திருவொற்றியூரில் தி.மு.க.வினரை தாக்கிய அ.தி.மு.க.வினர் 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 April 2021 4:23 AM GMT (Updated: 5 April 2021 4:23 AM GMT)

திருவொற்றியூரில் பணப்பட்டுவாடாவை தடுக்க முயன்ற தி.மு.க.வினரை தாக்கியதாக அ.தி.மு.க. வட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூரில் பணப்பட்டுவாடாவை தடுக்க முயன்ற தி.மு.க.வினரை தாக்கியதாக அ.தி.மு.க. வட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பணப்பட்டுவாடா

திருவொற்றியூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கே.குப்பன், தி.மு.க. சார்பில் கே.பி.சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நேற்று முன்தினம் இரவு 7-வது வார்டுக்கு உட்பட்ட திருவொற்றியூர் சார்லஸ் நகர் பகுதியில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியை சேர்ந்த தி.மு.க.வினர் தடுத்தனர். இதனால் அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் தட்டிக்கேட்ட தி.மு.க.வினரை தாக்கினர். இதில் காயம் அடைந்த தி.மு.க.வினர் திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தாக்குதல்

இதற்கிடையில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.குப்பன், அவருடைய மகன் கார்த்திக் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தி.மு.க.வினர் சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரிக்குள் புகுந்து அங்கிருந்த தி.மு.க.வினரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் மேலும் சில தி.மு.க.வினர் காயம் அடைந்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்திருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

ஆஸ்பத்திரி வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் தமிழரசன் என்பவரது கார் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.

சாலை மறியல்

தி.மு.க.வினர் தாக்கப்பட்ட செய்தி அறிந்ததும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்களுடன் தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன் குவிந்தனர். பின்னர் தி.மு.க.வினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நள்ளிரவில் தி.மு.க. வேட்பாளர் கே.பி.சங்கர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், ஆஸ்பத்திரியில் உளள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

2 பேர் கைது

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. 7-வது வட்ட செயலாளர் கண்ணன், அ.தி.மு.க. நிர்வாகி யுவராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story