வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்


வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 5 April 2021 4:50 PM GMT (Updated: 5 April 2021 4:50 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3,001 வாக்குச்சாவடி மையங்களுக்கும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

கடலூர், 

தமிழக சட்டசபைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி (தனி), குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி), புவனகிரி, விருத்தாசலம் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி செய்து வருகிறார்.

மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 3,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, அவற்றை இயக்குவதற்கு தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர மாதிரி வாக்குச்சாவடிகள், மகளிர் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

14 ஆயிரம் அலுவலர்கள்

தேர்தல் பணியில் 14 ஆயிரத்து 404 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தலைமை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவின் போது நடைபெறும் தகவல்களை உயர்அதிகாரிகளுக்கு எவ்வாறு செல்போனில் குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) அனுப்ப வேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடந்த இடங்களில் பணி நியமன ஆணைகளை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கினர்.

அதனை பெற்றுக்கொண்ட அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பஸ்கள் மூலம் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து அவர்கள் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று, அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா? என்பதை சரிபார்த்துக்கொண்டனர்.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

மேலும் மாவட்டம் முழுவதும் பதற்றமாக உள்ள 211 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராவும், 1300 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராவும் அமைத்து வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லவும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லவும் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

105 வகை பொருட்கள்

இவர்கள் நேற்று மாலை 2 மணிக்கு பிறகு அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வெப் கேமராக்கள், வாக்காளர் பட்டியல், முத்திரை, அழியாத மை, நூல், ஊசி பிளாஸ்டிக் பை என 105 வகையான பொருட்களை பலத்த பாதுகாப்புடன் வேனில் ஏற்றி வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு சென்று தயார் நிலையில் வைத்தனர்.

கடலூர் தொகுதியில் உள்ள 343 வாக்குச்சாவடி மையங்களுக்கு, கடலூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து 412 வாக்குப்பதிவு எந்திரங்களும், 412 கட்டுப்பாட்டு கருவிகளும், 442 வி.வி.பேட் எந்திரங்களும் வாகனங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

போலீஸ் பாதுகாப்புடன்

இதேபோல் திட்டக்குடி தொகுதியில் 305 மையங்களுக்கு 366 வாக்குப்பதிவு எந்திரங்களும், 366 கட்டுப்பாட்டு கருவிகளும், 393 வி.வி.பேட் எந்திரங்களும், விருத்தாசலம் தொகுதியில் உள்ள 355 வாக்குச்சாவடி மையங்களுக்கு 426 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 458 வி.வி.பேட் எந்திரங்களும், நெய்வேலி தொகுதியில் 299 மையங்களுக்கும் தலா 359 வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு எந்திரங்களும், 386 வி.வி.பேட் எந்திரங்களும், பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 341 வாக்குச்சாவடி மையங்களுக்கும் 410 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 440 வி.வி.பேட் எந்திரங்களும் கொண்டு செல்லப்பட்டன.

மேலும் குறிஞ்சிப்பாடி தொகுதியில் 336 வாக்குச்சாவடி மையங்களுக்கும் 404 வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு எந்திரங்களும், 433 வி.வி.பேட் எந்திரங்களும், புவனகிரி தொகுதியில் உள்ள 350 மையங்களுக்கும் தலா 420 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 452 வி.வி.பேட் எந்திரங்களும், சிதம்பரம் தொகுதிக்கு 354 மையங்களுக்கு தேவையான 425 வாக்குப்பதிவு எந்திரங்களும், 425 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 457 வி.வி.பேட் எந்திரங்களும், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் உள்ள 318 வாக்குச்சாவடி மையங்களுக்கும் தலா 382 வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு எந்திரங்களும், 410 வி.வி.பேட் எந்திரங்களும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

சிறப்பு ஏற்பாடு

வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிக்கு முடிவடைகிறது. இதில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா நோயாளிகள் மற்றும் தொற்று அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க துணை ராணுவத்தினர், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Next Story