பாதுகாப்பு பணியில் 1,806 போலீசார்


பாதுகாப்பு பணியில் 1,806 போலீசார்
x
தினத்தந்தி 5 April 2021 4:55 PM GMT (Updated: 5 April 2021 5:00 PM GMT)

நீலகிரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி 1,806 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீலகிரியில் ஊட்டி உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளில் 83 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 

வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் 4,168 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இன்று (அதாவது நேற்று) தெங்குமரஹடா, கரிக்கையூர், கிண்ணக்கொரை, சிறியூர், கெத்தை ஆகிய இடங்கள் தொலை தூரங்களில் உள்ளதால், அங்கு முதலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 

868 வாக்குச்சாவடிகளில் 112 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டது. அங்கு 112 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அனைத்து குழுவினரும் ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று சோதனை செய்யப்படுகிறது. 

சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. வாக்காளர்கள் பணம் வாங்கக்கூடாது. அரசியல் கட்சியினர் திருமண மண்டபங்கள், விடுதிகள், காட்டேஜ்களில் தங்கி இருப்பது தெரியவந்தால், அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள்.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2,490 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனர். இதில் 2,276 பேர் தபால் வாக்குகளை செலுத்தி உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் என 5,700 பேர் தபால் வாக்களிக்க தகுதி உள்ளது. 

இதுவரை 3 ஆயிரத்து 992 பேர் தபால் வாக்கு அளித்து இருக்கின்றனர். அவர்கள் அடுத்த மாதம்(மே) 2-ந் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம்.

நீலகிரியில் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். மத்திய பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படையினர் என 360 பேர் தேர்தல் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர்.

இதுதவிர உள்ளூர் போலீசார், நக்சல் தடுப்பு பிரிவினர் என மொத்தம் 1,806 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தொலைதூரத்தில் உள்ள பகுதிகளில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வரும் வகையில் போக்குவரத்து வசதி செய்யப்படுகிறது. 

அடர்ந்த வனப்பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர், போலீசாருடன் இணைந்து வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story