கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக வாக்குச்சாவடிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை


கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக வாக்குச்சாவடிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 April 2021 6:27 PM GMT (Updated: 5 April 2021 6:27 PM GMT)

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக வாக்குச்சாவடிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

ராமநாதபுரம்
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக வாக்குச்சாவடிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகள்
வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 
தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்குள் நுழையும் முன் முககவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்றும் பொருட்டு வரிசையில் குறிக்கப்பட்ட இடத்தில் நிற்க வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்குள் நுழையும் முன் அங்குள்ள கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். உடல் வெப்பநிலையை அறிய சுகாதார பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மருத்துவ கழிவுகள்
வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்த வாக்குச்சாவடியில் கொடுக்கப்படும் ஒரு முறை உபயோகிக்க கூடிய கையுறையை வலது கையில் கட்டாயம் அணிய வேண்டும். வாக்குச்சாவடிக்குள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே செல்ல வேண்டும். வாக்குச்சாவடியில் உள்ள முதல் அலுவலர் முன் வாக்காளர்கள் தங்கள் முக கவசத்தை விலக்கி அடையாள அட்டையை பரிசோதிக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும். வாக்களித்து வெளியே வந்த பின் உபயோகிக்கப்பட்ட கையுறையை அதற்கென ஒதுக்கப்பட்ட மருத்துவ கழிவுகளை சேகரிக்கும் தொட்டியில் போட வேண்டும். அங்குள்ள கிருமிநாசினி வைத்து மீண்டும் சுத்தம் செய்ய வேண்டும். 
 இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான முக உறை அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் மற்றும் கை சுத்தம் பேணுதல் போன்றவற்றை கடைபிடிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story