கொரோனா தொற்றுநோய் பரவும் விதமாக ஊர்வலமாக சென்ற அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் 95 பேர் மீது போலீசார் வழக்கு - தாசில்தாரை திட்டியதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் 10 பேரிடம் விசாரணை


கொரோனா தொற்றுநோய் பரவும் விதமாக ஊர்வலமாக சென்ற அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் 95 பேர் மீது போலீசார் வழக்கு - தாசில்தாரை திட்டியதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் 10 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 6 April 2021 12:12 PM GMT (Updated: 6 April 2021 12:12 PM GMT)

கொரோனா தொற்றுநோய் பரவும் விதமாக ஊர்வலமாக சென்றதாக அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் 95 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் உழவர் சந்தை அருகே நேற்று முன்தினம் தி.மு.க.வின் நிர்வாகிகள் சிலர் திருவள்ளூர் உழவர் சந்தையில் இருந்து ஜெயா நகர் மற்றும் தேரடி வரை முன் அனுமதியின்றி கொரோனா தொற்றுநோய் பரவும் விதமாக ஊர்வலமாக சென்றனர்.

இது சம்பந்தமாக திருவள்ளூர் டவுன் போலீசார் அனுமதியின்றி ஊர்வலமாக சென்றதாக தி.மு.க.வின் திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல அ.தி.மு.க. நகர செயலாளர் கந்தசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் திருவள்ளூர் ரெயில் நிலையம், பெரியகுப்பம், ஆயில் மில் போன்ற பகுதிகளில் எந்த ஒரு முன் அனுமதி பெறாமல் கொரோனா நோய் பரப்பும் விதமாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் பட்டாசுகளை வெடித்து ஊர்வலமாக சென்றனர்.

இதுதொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் அ.தி.மு.க. நிர்வாகிகள் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட 8 பேர் அனுமதி இன்றி தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் நேற்று முன்தினம் மாலை ஓட்டு சேகரித்தனர்.

இதனால் அங்கு வந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகானந்தன் பிரசார வேனை ஆய்வு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் சத்தியமூர்த்தி உள்பட 10 பேர் கொண்ட கும்பல் தாசில்தார் முருகானந்தத்தை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வெங்கல் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story