பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு


பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 April 2021 6:12 PM GMT (Updated: 6 April 2021 6:12 PM GMT)

பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பொள்ளாச்சி தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 852 பேரும், பெண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 159 பேரும், திருநங்கைகள் 38 சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 49 வாக்காளர்கள் உள்ளனர். 

இதேபோன்று வால்பாறை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 98 ஆயிரத்து 667 பேரும், பெண்கள் 1 லட்சத்து 6 ஆயிரத்து 795 பேரும், திருநங்கைகள் 17 சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 479 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக பொள்ளாச்சி தொகுதியில் 318 வாக்குச்சாவடிகளும், வால்பாறை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. பொள்ளாச்சி தொகுதியில் 8 வேட்பாளர்களும், வால்பாறை தொகுதியில் 6 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 381 வாக்குப்பதிவு எந்திரங்கள், 382 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 412 வாக்குபதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதேபோன்று வால்பாறை தொகுதியில் 353 வாக்குப்பதிவு எந்திரங்களும், 353 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 392 வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டது. 
இதை தவிர வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் எழுதுபொருட்கள், மெழுகுவர்த்தி, கவர், ரப்பர் ஸ்டாம்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

பொள்ளாச்சி சப்-கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான வைத்திநாதன் புனித லூர்து மாதா பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

முதியவர்கள், பெண்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட அனைவரும் வாக்களித்தனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்தனர். பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் நடக்க முடியாத வயதானவர்களை ஓட்டு போடுவதற்கு வாக்குச்சாவடிகளுக்கு தூக்கி வந்தனர்.

வெப் கேமரா மூலம் கண்காணிப்பு

வாக்காளர்கள் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் வாக்களிக்க வாக்காளர்களுக்கு ஒரு முறை பயன்படுத்த கூடிய கையுறை வழங்கப்பட்டது. 

வாக்காளர்கள் வாக்களித்த பின் கையுறையை கழற்றி, அங்கு வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டியில் போட்டனர். மாலை 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்பு உள்ள நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். 

பொள்ளாச்சி தொகுதியில் 28 வாக்குச்சாவடிகளும், வால்பாறை தொகுதியில் 9 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை ஆகும். இதை தவிர கடந்த தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. 

பதற்றமான மற்றும் கடந்த தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் கேமராக்கள் பொருத்தியும் வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டன.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசாருடன், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

மேலும் அந்த பகுதியில் வாகனங்கள் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தன்னார்வலர்கள் வாக்குச்சாவடிக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை சக்கர நாற்காலியில் வைத்து வாக்குப்பதிவு மையத்திற்கு அழைத்து சென்றனர். 

அவர்களை அழைத்து செல்ல அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டு இருந்தது. வாக்குப்பதிவை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வைத்திநாதன் (பொள்ளாச்சி), துரைசாமி (வால்பாறை) ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story