போடி அருகே ரவீந்திரநாத் எம்.பி. கார் மீது கல்வீசி தாக்குதல்


போடி அருகே ரவீந்திரநாத் எம்.பி. கார் மீது கல்வீசி தாக்குதல்
x
தினத்தந்தி 6 April 2021 6:19 PM GMT (Updated: 2021-04-06T23:49:07+05:30)

போடி அருகே ரவீந்திரநாத் எம்.பி. கார் மீது மர்மகும்பல் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி:
போடி அருகே ரவீந்திரநாத் எம்.பி. கார் மீது மர்மகும்பல் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
எம்.பி. கார் மீது தாக்குதல்
போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி அவருடைய மகனும், தேனி எம்.பி.யுமான ப.ரவீந்திரநாத் நேற்று போடி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று கள நிலவரங்களை பார்வையிட்டார். அதன்படி, போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு ப.ரவீந்திரநாத் தனது காரில் வந்தார். அ.தி.மு.க.வினர் சிலர் மற்றொரு காரில் வந்தனர். இதற்கிடையே வாக்குச்சாவடி அருகே ப.ரவீந்திரநாத் வந்தபோது, திடீரென்று அவரது கார் மீது மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த காரின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.
சாலை மறியல்
இதனால் தாக்குதல் நடத்திய நபர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதையடுத்து தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்யக்கோரி வாக்குச்சாவடி அருகில் அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 
தி.மு.க.வினர் காரணம்
இந்த சம்பவம் குறித்து ப.ரவீந்திரநாத் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "போடி ஒன்றியத்தில் காலையில் இருந்தே கள ஆய்வு மேற்கொண்டேன். மக்கள் எழுச்சியாக அ.தி.மு.க.வுக்கு வரவேற்பு அளித்து வருவதை காண முடிந்தது. பெருமாள்கவுண்டன்பட்டியில் வாக்குச்சாவடிக்கு நான் வந்த உடனே, மதுபோதையில் தி.மு.க. கட்சி துண்டை தலையில் கட்டிக்கொண்டு சிலர் வந்தனர். நான் அமர்ந்திருந்த கார் இருக்கையை நோக்கி கற்களை தூக்கி வீசி கொலைவெறி தாக்குதல் நடத்தினர். வன்முறை மீண்டும் தலைவிரித்தாட தொடங்கி இருக்கிறது. தமிழக மக்கள் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தி.மு.க.வுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். தாக்கிய நபர்கள் யார் என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

Next Story