தேனி மாவட்டத்தில் மந்தமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு


தேனி மாவட்டத்தில் மந்தமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 April 2021 6:29 PM GMT (Updated: 2021-04-06T23:59:30+05:30)

தேனி மாவட்டத்தில் வாக்குப்பதிவு மந்தமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. வாக்காளர்கள் முக கவசம் அணிந்து ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.

தேனி:
தேனி மாவட்டத்தில் வாக்குப்பதிவு மந்தமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. வாக்காளர்கள் முக கவசம் அணிந்து ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.
வாக்குப்பதிவு
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்று நடந்தது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதற்காக மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவுக்கு முன்பாக மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஓட்டு போட்டு எந்திரம் சரியாக செயல்படுகிறதா என பார்வையிட்டனர். இந்த மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் அதில் பதிவாகி இருந்த வாக்கு விவரங்கள் அழிக்கப்பட்டு அதுகுறித்த விவரங்கள் வேட்பாளர்களின் முகவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. பின்னர், வாக்காளர்கள் வாக்களிக்க தொடங்கினர்.
முககவசம்
பெரும்பாலான வாக்காளர்கள் முக கவசம் அணிந்து வந்தனர். சிலர் முக கவசம் அணியாமல் வந்தனர். அவர்களுக்கு வாக்குச்சாவடியில் முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டு தலா ஒரு கையுறை கொடுக்கப்பட்டது. வலது கையில் கையுறை அணிந்து, இடது கையின் ஆட்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்பட்டது. பின்னர், கையுறை அணிந்த கை விரலால் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வாக்காளர்கள் வாக்களித்தனர்.
காலை நேரத்தில் வாக்குப்பதிவு மந்தமாக நடந்தது. காலை 10 மணிக்கு பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்பானது.
வெப்கேமரா
தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேவதானப்பட்டி, கண்டமனூர், கடமலைக்குண்டு, போடி, தேவாரம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே வாக்காளர் தகவல் சீட்டு வினியோகம் செய்யப்பட்டது. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அரசியல் கட்சியினர் நின்று கொண்டு வாக்காளர்களுக்கு தங்கள் கட்சி வேட்பாளர் சின்னத்தின் வரிசை எண்ணை சொல்லி வாக்கு சேகரித்தபடி நின்றனர்.
மாவட்டத்தில் 782 வாக்குச்சாவடிகளில் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இத்தகைய வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story