12 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு


12 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு
x
தினத்தந்தி 6 April 2021 9:26 PM GMT (Updated: 6 April 2021 9:26 PM GMT)

பெரம்பலூர்-குன்னம் தொகுதிகளில் 12 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

பெரம்பலூர்:

எந்திரம் கோளாறு
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 816 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் பெரம்பலூர் தொகுதியில் உள்ள பெரம்பலூர் புனித தோமினிக் பள்ளி, ரோவர் பள்ளி, வேலூர், பொம்மனப்பாடி, கொட்டாரகுன்று ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளிலும், குன்னம் தொகுதியில் வைத்தியநாதபுரம், கார்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியபோது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஆனது.
பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பாடாலூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறால் ஓட்டுப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பூலாம்பாடி, வேப்பந்தட்டை, உடும்பியம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் எந்திரங்களில் ஏற்பட்ட வரிசை எண் குளறுபடிகளால் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியது.
குன்னம் தொகுதியில்...
குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பொருத்தி தயார் நிலைக்கு கொண்டு வருவதற்கு காலதாமதம் ஆனது. அதனால் வாக்குப்பதிவு தொடங்குவதற்கும் தாமதம் ஏற்பட்டது. குன்னம் அருகே உள்ள காடூர் கீழபெரம்பலூர் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அதனால் அங்கு 2 மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு தொடங்க காலதாமதம் ஆனது.
பின்னர் மாற்று எந்திரங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சுமார் 7.40 மணியளவிலேயே முழுமையாக வாக்குப்பதிவு தொடங்கியது. மேலமாத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வர்ணம் பூசப்பட்டு மாவிலை தோரணம் மற்றும் வாழைமரம் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரிய வெண்மணி கிராமத்தில் வாக்களிக்க வரும் வாக்காளர்களை கவரும் விதமாக இரண்டு கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு சுட சுட வடைகள் சுட்டு கொடுத்தனர். அதை வாக்காளர்கள் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர். அதேபோல் குன்னத்தில் வெயில் கொடுமை தாங்காமல் அனைவருக்கும் நீர்மோர் வழங்கப்பட்டது.
செயல்படாத வாக்குப்பதிவு எந்திரங்கள்
மங்களமேடு அருகே வேப்பூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கீழப்பெரம்பலூர், மேட்டுக்காளிங்கராயநல்லூர் ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியபோது, வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் பழுதான எந்திரங்களுக்கு பதிலாக மாற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. வசிஷ்டபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 7 ஓட்டுகள் பதிவான நிலையில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் அங்கு வாக்குப்பதிவு தடைபட்டது. மாற்று வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்ட பின்னர், வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

Next Story