11 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு ‘சீல்’ வைப்பு-ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன


11 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு ‘சீல்’ வைப்பு-ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன
x
தினத்தந்தி 7 April 2021 12:03 AM GMT (Updated: 7 April 2021 12:03 AM GMT)

11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

சேலம்:
11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 
பதிவான வாக்குகள்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 இடங்களில் வைத்து எண்ணப்படுகின்றன. அதன்படி சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், மேட்டூர் ஆகிய 4 தொகுதிகளில் பதிவான வாக்குகள் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் எண்ணப்படுகின்றன. அதே போன்று சேலம் தெற்கு, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய 3 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அம்மாபேட்டை கணேஷ் கலை அறிவியல் கல்லூரி மையத்தில் எண்ணப்படுகின்றன.
எடப்பாடி, சங்ககிரி ஆகிய 2 தொகுதிகளில் பதிவான வாக்குகள், சங்ககிரி விவேகானந்தா கல்லூரி மையத்திலும், ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் மணிவிழுந்தான் மாருதி பாலிடெக்னிக் கல்லூரி மையத்திலும் எண்ணப்படுகிறது.
சீல் வைக்கப்பட்டன
நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. பின்னர் சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகளில் ஏற்றி 4 மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
மாவட்டத்தில் உள்ள 4 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவுவாயிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவர்கள் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story