ஆதிவாசி மக்கள் நீண்ட தூரம் நடந்து வந்து வாக்களித்தனர்


ஆதிவாசி மக்கள் நீண்ட தூரம் நடந்து வந்து வாக்களித்தனர்
x
தினத்தந்தி 7 April 2021 2:06 AM GMT (Updated: 7 April 2021 2:06 AM GMT)

வால்பாறை எஸ்டேட் பகுதியில் ஆதிவாசி மக்கள் நீண்ட தூரம் நடந்து வந்து வாக்களித்தனர்.

வால்பாறை

வால்பாறை எஸ்டேட் பகுதியில் ஆதிவாசி மக்கள் நீண்ட தூரம் நடந்து வந்து வாக்களித்தனர். வாக்குச்சாவடி அருகே காட்டு யானைகள் முகாமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆதிவாசி மக்கள் 

வால்பாறையில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். சில வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

மேலும் வால்பாறை பகுதியில் உள்ள ஆதிவாசி பழங்குடியினர் தங்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து நீண்ட தூரம் நடந்து வந்து ஆர்வமுடன் வாக்களித்துவிட்டு வீடு திரும்பினார்கள். 

வால்பாறை தொகுதியில் 4 இடங்களில் மாணிக்கா எஸ்டேட் 182-வது வாக்குச்சாவடி, இஞ்சிப்பாறை எஸ்டேட் 209-வது வாக்குச்சாவடி, கெஜமுடி எஸ்டேட் 216-ஏ வாக்குச்சாவடி உள்பட 4 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. இதனால் வாக்காளர்கள் அவதியடைந்தனர்.

காட்டு யானைகள் 

மேலும் மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாக்குச்சாவடிக்கு அருகே ஒரு குட்டியுடன் 3 யானைகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

தொடர்ந்து நேற்றும் அந்த வாக்குச்சாவடி அருகே காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 இதையடுத்து வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை 5 மணி நிலவரப்படி வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 63.17 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.


Next Story