36 மின்னணு எந்திரங்கள் பழுதானதால் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்


36 மின்னணு எந்திரங்கள் பழுதானதால் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்
x
தினத்தந்தி 7 April 2021 2:06 AM GMT (Updated: 7 April 2021 2:06 AM GMT)

ஊட்டி உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளில் 36 மின்னணு எந்திரங்கள் பழுதானதால் மாதிரி வாக்குப்பதிவு தாமதமானது.

ஊட்டி

ஊட்டி உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளில் 36 மின்னணு எந்திரங்கள் பழுதானதால் மாதிரி வாக்குப்பதிவு தாமதமானது.

மாதிரி வாக்குப்பதிவு

ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது 50 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வேட்பாளருக்கு நேராக உள்ள சின்னம் சரியாக பதிவு ஆகிறதா? என்று சரிபார்த்து உறுதி செய்யப்பட்டது. 

அப்போது 36 எந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக மண்டல அலுவலர்கள் மூலம் பழுது ஏற்பட்ட எந்திரங்களுக்கு பதிலாக வேறு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட்டது. 

இதனால் மாதிரி வாக்குப்பதிவு நடப்பது தாமதமானது. தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் சமூக இடைவெளி, முககவசம் அணிவது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வாக்குப்பதிவு செய்தனர். 

அமைதியான முறையில்...

நீலகிரியில் 5 வாக்குச்சாவடிகளில் வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டன. இதனால் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 

ஊட்டி தொகுதியில் 2, குன்னூர் தொகுதியில் 2, கூடலூர் தொகுதியில் ஒன்று என 5 எந்திரங்களில் பழுது ஏற்பட்டதால், சிரமத்தை போக்க உடனடியாக மண்டல அலுவலர்கள் மூலம் கூடுதலாக ஒதுக்கப்பட்டு இருந்த வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டது. 

அந்த எந்திரங்களில் புதிதாக ரசீது பேட்டரி இணைத்து பொருத்தி பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது.


Next Story