மாவட்ட செய்திகள்

பெண்கள் மீது தாக்குதல்-மறியல் + "||" + Attack-Stir on Women

பெண்கள் மீது தாக்குதல்-மறியல்

பெண்கள் மீது தாக்குதல்-மறியல்
கோவிலுக்கு பொங்கல் வைத்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து மறியல் நடந்தது
செம்பட்டி:

ஆத்தூர் வடக்கு தெரு 10-வது வார்டு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், அப்பகுதியில் உள்ள ஊர்காவலன் சுவாமி கோவிலில் பொங்கல் வைத்து நேற்று முன்தினம் வழிபாடு நடத்தினர். 

பின்னர் அவர்கள் பொங்கல் பானைகளை தலையில் சுமந்தபடி தங்களது வீடுகளுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு மறைந்திருந்த மற்றொரு பிரிவை சேர்ந்த 20 பேர் கொண்ட கும்பல், பெண்களை கேலி செய்தது. மேலும் கற்களை வீசி பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள், பொங்கல் பானைகளை கீழே போட்டு விட்டு ஓடினர். 

இதுகுறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை ஆத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த வெற்றி என்ற வாலிபரை, பெண்கள் மீது கற்கள் வீதி தாக்குதல் நடத்திய இளைஞர்கள் சிலர் இரும்பு கம்பி, உருட்டுக்கட்டையால் தாக்கினர். 

இதில் படுகாயம் அடைந்த வெற்றிக்கு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பெண்கள் மற்றும் வெற்றி மீதான தாக்குதலை கண்டித்து 10-வது வார்டு வடக்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் ஆத்தூரில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். 

அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.