கூடலூர் அருகே கண்மாய்க்குள் இறங்கி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்


கூடலூர் அருகே கண்மாய்க்குள் இறங்கி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
x
தினத்தந்தி 7 April 2021 2:38 PM GMT (Updated: 7 April 2021 2:38 PM GMT)

கூடலூர் அருகே ஒட்டான்குளம் கண்மாய் தண்ணீர் மாசடைவதை தடுக்கக்கோரி விவசாயிகள் அந்த கண்மாய்க்குள் இறங்கி அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர்:
கூடலூர் அருகே ஒட்டான்குளம் கண்மாய் தண்ணீர் மாசடைவதை தடுக்கக்கோரி விவசாயிகள் அந்த கண்மாய்க்குள் இறங்கி அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளத்துக்குள்
மாசடைந்த கண்மாய்
தேனி மாவட்டம் கூடலூர் நகரின் மையப்பகுதியில் ஒட்டான்குளம் கண்மாய் உள்ளது. முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் 18-ம் கால்வாய் வழியாக கொண்டுவரப்பட்டு இந்த கண்மாயில் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த கண்மாய் மூலம் சுமார் 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர அந்த கண்மாயை ஒட்டியுள்ள கால்நடை வளர்ப்போரும் பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த கண்மாய் தண்ணீர் குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கண்மாய் தற்போது சுகாதாரக்கேட்டில் சிக்கியுள்ளது. கூடலூர் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் மொத்தமாக கொண்டுவந்து இந்த கண்மாயில் கொட்டப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. அவ்வாறு மாசுபட்ட தண்ணீரை குடிக்கும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. 
இதுதவிர கண்மாயை சுற்றியுள்ள பொதுமக்கள் கண்மாய் கரைகளில் குப்பைகளை கொட்டுவதுடன், திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் மதுபிரியர்கள் கண்மாய் கரையில் மதுகுடித்துவிட்டு, மதுபாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர். மேலும் சிலர் பாட்டில்களை கண்மாய்க்குள் வீசி செல்கின்றனர். இதனால் கண்மாய் தண்ணீர் மாசடைவதை தடுக்க வலியுறுத்தி கூடலூர் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுப்பணித்துறை, நகராட்சி, போலீஸ் துறை ஆகியோரிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
விவசாயிகள் போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கொடியரசன், ஜெயபால், சதீஷ் பாபு, தெய்வம் மற்றும் கூடலூர் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஒட்டான்குளம் கண்மாய் தண்ணீர் மாசடைவதை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கண்மாய்க்குள் இறங்கி அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்தினர். 
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story