மாவட்ட செய்திகள்

தேனி அருகே வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் + "||" + Rooms where voting machines are kept sealed

தேனி அருகே வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல்

தேனி அருகே வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல்
தேனி அருகே வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தேனி:
தேனி அருகே வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 
வாக்குப்பதிவு எந்திரங்கள்
தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இந்த 4 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணும் மையம் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டன.
விடிய, விடிய வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்த வண்ணம் இருந்தன. கடைசி வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆனைமலையான்பட்டியில் இருந்து நேற்று காலை 7 மணியளவில் வந்தது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளுக்கு வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நடைமுறைகளை தேர்தல் பொது பார்வையாளர்கள் ரவீந்தர், பிரபு டட்டா டேவிட் பிரதான் ஆகியோர் பார்வையிட்டனர்.
வீடியோ பதிவு
அறைக்கு சீல் வைக்கப்பட்ட பின்பு அந்த அறைகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் தரப்பில் ‘சீல்’ வைக்கப்பட்ட பின்னர், விருப்பம் தெரிவிக்கும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் ‘சீல்’ வைத்தனர். கம்பம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைக்க முயன்ற போது, அ.ம.மு.க. பிரதிநிதி ஒருவர் திடீரென இந்த பணியை தடுத்து நிறுத்தினார்.
அ.ம.மு.க. தரப்பில் வாக்குப்பெட்டிகளை பார்வையிடும் முன்பே சீல் வைப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அந்த அறை திறக்கப்பட்டது. பின்னர் அந்த நபர் அறைக்குள் சென்று வாக்குப்பெட்டிகளை பார்வையிட்டார். அந்த காட்சிகள் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
வாக்குவாதம்
இதற்கிடையே போடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் 2 அறைகளிலும், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய படிவங்கள் ஆகியவை மற்றொரு அறையிலும் என மொத்தம் 3 அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. சீல் வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் போடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அங்கு வந்தார். அவருடன் பெரியகுளம் தொகுதி வேட்பாளரும், எம்.எல்.ஏ.வுமான சரவணக்குமார், தேனி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி ஆகியோரும் வந்தனர்.
தி.மு.க. வேட்பாளரான தான் வருவதற்கு முன்பே சீல் வைக்கப்பட்டதை கண்டித்தும், சீல் வைக்கப்பட்ட அறையை மீண்டும் திறந்து காட்ட வலியுறுத்தியும் தேர்தல் அதிகாரிகளிடம் தங்கதமிழ்செல்வன் வாக்குவாதம் செய்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவரிடம் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது குறித்தும், தி.மு.க. சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றதையும் அவர்கள் தெரிவித்தனர்.
தி.மு.க. சார்பில் ‘சீல்’
இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு தொடர்பாக தனது சந்தேகங்களை தங்கதமிழ்செல்வன் கேட்டார். அதற்கு கலெக்டர் பதில் அளிக்கையில், "வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்ட அறையின் கதவு பூட்டப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.  இங்கு  கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், இந்த வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அனைத்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளையும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எந்த நேரமும் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிடலாம். 24 மணி நேரமும் இங்கேயே ஆட்களை நியமித்தும் கண்காணித்துக் கொள்ளலாம். ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சீல் அருகில் வேட்பாளரும் சீல் வைத்துக்கொள்ளலாம்" என்றார்.
இதையடுத்து போடி தொகுதிக்கான 3 அறைகளிலும் உள்ள பூட்டுகளில் தி.மு.க. தரப்பிலும் சீல் வைக்கப்பட்டது. இதற்காக தங்கதமிழ்செல்வன் தனியாக சீல் கொண்டு வந்து இருந்தார்.