கொரோனா வார்டு தயார்


கொரோனா வார்டு தயார்
x
தினத்தந்தி 7 April 2021 4:37 PM GMT (Updated: 7 April 2021 4:37 PM GMT)

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 190 படுக்கைகளுடன் கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 190 படுக்கைகளுடன் கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
190 படுக்கைகளுடன் கொரோனா வார்டு
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே திருப்பூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 190 படுக்கைகளுடன் மீண்டும் கொரோனா வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் செய்துள்ளது.
தடுப்பு வழிமுறைகளை
இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இருந்தே கொரோனா வார்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இருப்பினும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. இதனால் கொரோனா வார்ட்டில் இருந்த படுக்கைகள் குறைக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில் 190 படுக்கைகளுடன் மீண்டும் கொரோனா வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிரமம் இன்றி சிகிச்சை பெறலாம். மேல் சிகிச்சை தேவைப்படுகிறவர்கள் கோவைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். எனவே பொதுமக்கள் அச்சமடையாமல் அரசு அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story