கச்சிராயப்பாளையம் அருகே மாரியம்மன் கோவில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்


கச்சிராயப்பாளையம் அருகே  மாரியம்மன் கோவில் தேர் திருவிழா  திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 7 April 2021 4:42 PM GMT (Updated: 7 April 2021 4:42 PM GMT)

கச்சிராயப்பாளையம் அருகே நல்லாத்தூர் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி


மாரியம்மன் கோவில்

கச்சிராயப்பாளையம் அருகே நல்லாத்தூரில் புத்துப்பட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொடியேற்றி தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும்  வழிபாடு நடைபெற்றது. மேலும் பல்வேறு வகையான பூஜைகளும் நடைபெற்று வந்தன.

தேர்திருவிழா

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை மாரியம்மனுக்கு பால், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பட்டுப்புடவையால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளினார். 

இதைத் தொடர்ந்து மாலை 4 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி என்று கோஷம் எழுப்பினர். தேர் கோவிலை சுற்றி வந்து மாலை 5 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது. இதில் நல்லாத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தற்போது கொரனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் கொரோனா தடுப்புக்கான எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.  பக்தர்கள் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் திரண்டு நின்றதால் கொரோனா தொற்று பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே வரும் காலங்களில் விழாக்களின் போது கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். 

Next Story