மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தொடர் மின்தடையை கண்டித்து வணிகர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


மூங்கில்துறைப்பட்டு பகுதியில்  தொடர் மின்தடையை கண்டித்து வணிகர்கள் சாலை மறியல்  போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 April 2021 4:49 PM GMT (Updated: 7 April 2021 4:49 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தொடர் மின்தடையை கண்டித்து வணிகர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் மின் தடை இருந்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மட்டுமல்லாமல் வணிகர்களும் கடும் சிரமப்பட்டு வந்த நிலையில் வியாபாரம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும் இரவு நேரங்களில் புழுக்கம் காரணமாக தூக்கமின்றி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மூங்கில்துறைப்பட்டு இளம் மின்பொறியாளர் அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் மீண்டும் நேற்று காலை 10 மணி அளவில் மூங்கில்துறைப்பட்டு பகுதியை சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து தொடர் மின் தடை குறித்து புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர் மின்தடையை கண்டித்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story