மாவட்ட செய்திகள்

குளவிகள் கொட்டி 10 பேர் காயம் + "||" + wasp bite

குளவிகள் கொட்டி 10 பேர் காயம்

குளவிகள் கொட்டி 10 பேர் காயம்
கொழுமம் அமராவதி ஆற்றங்கரையில் திதிகொடுக்க சென்ற 10 பேரை குளவிகள் கொட்டியது.
போடிப்பட்டி
கொழுமம் அமராவதி ஆற்றங்கரையில் திதிகொடுக்க சென்ற 10 பேரை குளவிகள் கொட்டியது.
குளவிகள் கொட்டியது
குமரலிங்கம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய தந்தை கடந்த 11 நாட்களுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து இறந்த  தந்தைக்கு திதி கொடுப்பதற்காக சீனிவாசன் தனது குடும்பத்துடன் கொழுமம் அமராவதி ஆற்றங்கரைக்கு சென்றுள்ளார். அப்போது ஆற்றங்கரையிலுள்ள புதரில் கூடு கட்டியிருந்த குளவிகள் ஹோமப்புகை மற்றும் சிறுவர்களால் கலைந்ததாகக் கூறப்படுகிறது. 
இதையடுத்து  குளவிகள் திடீரென்று கூட்டம் கூட்டமாக படையெடுத்து சீனிவாசன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை விரட்டி விரட்டிக் கொட்டியது. இதனால் பெரியவர்கள் சிறியவர்கள் பெண்கள் உட்பட்ட அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனைப் பார்த்த அந்தவழியாக வந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு குமரலிங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக உடுமலை மற்றும் கோவைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குளவிகள் கொட்டியதால் சீனிவாசன் மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட  10 பேர் காயம் அடைந்தனர். 
புதர் மண்டிக்கிடக்கிறது
 கொழுமம் அமராவதி ஆற்றங்கரைக்கு மாதம்தோறும் அமாவாசை மற்றும் குறிப்பிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் வருகின்றனர்.  ஆனால் இந்த பகுதி போதிய பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் கிடக்கிறது.
இதனால் குளவிகள் மட்டுமல்லாமல் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டமும் இங்கு உள்ளது. எனவே இந்த பகுதியை சுத்தம் செய்வதுடன் பொதுமக்களுக்கு போதிய வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த பகுதியில் பொதுமக்கள் ஆற்றில் பாதுகாப்பாக குளிக்கும் வகையில் படித்துறை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.