கள்ளக்குறிச்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைத்துள்ள அறைக்கு ‘சீல்’ வைப்பு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


கள்ளக்குறிச்சியில் வாக்கு எண்ணும் மையத்தில்  மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைத்துள்ள அறைக்கு ‘சீல்’ வைப்பு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 April 2021 4:58 PM GMT (Updated: 7 April 2021 4:58 PM GMT)

கள்ளக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  கள்ளக்குறிச்சி (தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகவே 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 1,569 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.நினைவு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

அதிகாரிகள் சீல் வைத்தனர்

பின்னர் அவற்றை வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா, போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், தேர்தல் பொது பார்வையாளர்கள் சந்திரசேகர் வாலிம்பே, இந்துமல்கோத்ரா, காவல்துறை பார்வையாளர் அனுராதா சங்கர் ஆகியோர் மேற்பார்வையில் சரிபார்க்கப்பட்டது.
இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தொகுதிவாரியாக தனித்தனி அறைகளில் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

தேர்தல் நடத்தும் அதிகாரிகள்

அப்போது கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரவணன், ராஜவேல், ராஜாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சக்திவேல், தேர்தல் தனி தாசில்தார் பாலசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவுதமன் மற்றும் வேட்பாளர் உதயசூரியன், செந்தில்குமார், சந்தோஷ் மற்றும் வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர். 

3 அடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறைக்கும் தலா 2 துணை ராணுவத்தினர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 6 இன்ஸ்பெக்டர்கள், 18 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் 150 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story